2016-11-17 15:41:00

பாதுகாப்பான, நீதியான சமுதாயத்தை உருவாக்க, மதங்களின் பங்கு


நவ.17,2016. பாதுகாப்பான, நலம் நிறைந்த, நீதியான சமுதாயத்தை உருவாக்க, மதங்கள் பெருமளவில் பங்களிக்கமுடியும் என்று, கனடா நாட்டு ஆயர்களும், ஏனைய மதத்தலைவர்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர் என்று, ZENIT கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

நவம்பர் 7, கடந்த திங்கள் முதல், 18, இவ்வெள்ளி முடிய, மொரோக்கோ நாட்டின் மராக்கேஷ் நகரில் நடைபெற்றுவரும் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கு தங்கள் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துள்ள கனடா நாட்டு ஆயர்கள், இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தங்கள் செபங்களும், ஆதரவும் உண்டு என்று கூறியுள்ளனர்.

COP22 மாநாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரதிநிதிகளும், சுயநலத்தை விட்டு வெளியேறி, மனசாட்சியுடன் விவாதங்களில் பங்கேற்கவும், மக்கள் நலனை முன்னிறுத்திய முடிவுகளை எடுக்கவும் வேண்டுமென, கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், Douglas Crosby அவர்கள் கூறியுள்ளார்.

மராக்கேஷ் மாநாட்டில் கூடிவந்துள்ள அனைவரும், சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுப்பதை, ஓர் அவசர அழைப்பாக ஏற்று, பொறுப்புணர்வோடு முடிவுகள் எடுக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் ஓர் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.