2016-11-17 15:42:00

மியான்மார் நாட்டிற்குத் தேவையான ஒரே ஒரு மதம், அமைதி


நவ.17,2016. இன்று, மியான்மார் நாட்டிற்குத் தேவையான ஒரே ஒரு மதம், அமைதி என்ற மதம்" என்று, மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறினார்.

மேற்கு மியான்மாரில், ரோஹிங்கியா இஸ்லாமிய போராளிகளுக்கும், மியான்மார் இராணுவத்திற்கும் இடையே, அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் மோதல்களில், 60க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா இஸ்லாமியர் கொல்லப்பட்டதையடுத்து, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், அமைதிக்காக விண்ணப்பித்துள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளாக மியான்மாரில் நிகழ்ந்த எந்த ஒரு போரினாலும், நல்லவை உருவாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், ஒப்புரவும், உரையாடலும் மட்டுமே நாட்டை, வளர்ச்சிக்குக் கொண்டுசெல்லும் என்றும், போர்கள், நம் சமுதாயத்தில் மேலும் காயங்களை மட்டுமே உருவாக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

கர்தினால் போ அவர்களுடன் இணைந்து, பல்சமய தலைவர்கள் விடுத்துள்ள ஒரு விண்ணப்பத்தில், அரசியல்வாதிகள், இராணுவத்தினர், பொதுமக்கள், சிறுபான்மையினர் அனைவரும், மியான்மார் நாட்டின் சகோதர சகோதரிகள் என்றும், ஒப்புரவும், அமைதியுமே நம்மை வாழவைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத இறுதியிலிருந்து ஆரம்பமான இராணுவத் தாக்குதல்களில், ரோஹிங்கியா இஸ்லாமியரின் 430 வீடுகள் எவ்வித காரணமும் இன்றி எரிக்கப்பட்டன என்றும், 2,00,000த்திற்கும் அதிகமானோர் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்றும், மனித உரிமை இயக்கங்கள் கூறிவருகின்றன என்று, ஆசிய செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.