2016-11-17 15:30:00

வறியோரிடமிருந்து பாடங்களைப் பயில்வதற்கு திருத்தந்தை அழைப்பு


நவ.17,2016. நற்செய்தி அறிவிப்பு என்பது திருஅவையின் உயிர் நாடி என்றாலும், அந்த அறிவிப்பு, உலகச் சூழலில், பல்வேறு வடிவங்கள் பெறுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் கூறினார்.

அகில உலக காரித்தாஸ் அமைப்பின் பன்னாட்டுப் பிரதிநிதிகள், தங்கள் ஆண்டுக்கூட்டத்தை நிறைவு செய்து, இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்திக்கச் சென்ற வேளையில், இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள், நீதி, அமைதி, முன்னேற்றம் என்ற பல விழுமியங்களுக்காக உழைப்பதை, திருத்தந்தை பாராட்டினார்.

ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிவரும் காரித்தாஸ் அமைப்பு, வெறும் சமுதாய அமைப்பு அல்ல, மாறாக, திருஅவையின் ஓர் அங்கம் என்றும், திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை ஆற்றும் ஒரு கிளை என்றும், திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

இன்றைய உலகில், மனித சமுதாயம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகள் மத்தியில், பிறரன்புப் பணிகளை எவ்விதம் படைப்பாற்றல் மிக்க வழிகளில் மாற்றமுடியும் என்பதைச் சிந்திக்கும் சவால் நமக்கு முன் உள்ளது என்று, காரித்தாஸ் அமைப்பினரிடம் கூறினார், திருத்தந்தை.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தான மாண்பை மீண்டும் நிலைநாட்டுவதில், இறைவாக்கினர்களுக்குரிய துணிவுடன் செயலாற்றுமாறும், அனைத்து அநீதிகளையும், சுரண்டல்களையும் எதிர்த்து போராடும் சக்தி பெறுமாறும் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

வறுமைக்கு எதிராக ஆக்கப்பூர்வமானப் பணிகளை மேற்கொள்ளும்போது, வறியோரிடமிருந்து பாடங்களைப் பயில்வதற்கும் காரித்தாஸ் அமைப்பினர் திறந்த உள்ளம் கொண்டிருக்கவேண்டுமென்று திருத்தந்தை தன் உரையில் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.