2016-11-18 15:50:00

சீனாவில் அச்சிடப்பட்டுள்ள 15 கோடி விவிலியப் பிரதிகள்


நவ.18,2016. சீனாவில், விவிலியத்தை அச்சிட்டு விநியோகிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே நிறுவனமான Amity பதிப்பகம், 1988ம் ஆண்டிலிருந்து இதுவரை 15 கோடி பிரதிகளை அச்சிட்டுள்ளதாக அறிவிக்கிறது.

தான் நிறுவப்பட்டதன் 30ம் ஆண்டை தற்போது சிறப்பிக்கும் இந்த Amity பதிப்பகம், 2010ம் ஆண்டு வரை 8 கோடி பிரதிகளை அச்சிட்டிருந்த நிலையில், தற்போது அது 15 கோடி என்ற மைல் கல்லை எட்டியுள்ளது.

சீனாவில் விவிலியப் பிரதிகளை அச்சிட அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்நிறுவனம், இதுவரை, நூறு மொழிகளில் விவிலியத்தை அச்சிட்டு, 70 நாடுகளில் விநியோகித்துள்ளது.

சீன அரசின் அடக்கு முறைகளுக்குப் பயந்து, ஒரு விவிலிய பிரதியிலிருந்து வார்த்தை, வார்த்தையாக எழுதி, மக்கள் விவிலிய பிரதிகளைப் பாதுகாத்து வந்த நிலை மாறி, தற்போது மிக மலிவான விலையில் விவிலியப் பிரதிகள் மக்கள் சென்றடைகின்றன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

விவிலியப் பிரதிகளை அச்சிட்டு மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கும் Amity பதிப்பகம், உலகம் முழுவதும் பல்வேறு பிறரன்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.