2016-11-19 16:36:00

நீதிக்கும் பிறரன்பிற்கும் இடையே ஆரோக்கியமான உறவு தேவை


நவ.19,2016. உண்மையை நோக்கிச் செயல்பட வேண்டியது அவசியம், ஆனால் அதேவேளை, திருமணத்தில் தோல்வியைச் சந்தித்தவர்களை, எக்காரணம் கொண்டும் ஒதுக்கி வைக்கக்கூடாது என, திருமணமுறிவு குறித்த அணுகுமுறைப் பயிற்சியில் பங்குபெற்றுவரும் ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமண முறிவுகள் குறித்த புதிய அணுகுமுறைச் சட்டங்களில் பயிற்சி பெற்றுவரும் திருஅவை அதிகாரிகளை, இவ்வெள்ளியன்று மாலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, தங்கள் திருமணம் தோல்வியில் முடிந்ததால், திருஅவையை விட்டு விலகிப் போயிருக்கும் தம்பதியரின் கவலைகளைப் புரிந்துகொள்ள, திருஅவை இறங்கி வரவேண்டும் என்றார்.

திருமுழுக்கின் வழியாக இயேசுவுடன் ஒன்றித்திருக்கும் இவர்களை, ஒரு தாய்க்குரிய அக்கறையுடன் அணுகிச் செல்லவேண்டியது ஆயர்களின் கடமை என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்குள், அவர்கள், ஓர் அங்கமாக உணர வைக்கப்பட வேண்டும் என்றார்.

விசுவாசத்தைப் போதிக்கும் நிலையிலிருக்கும் ஆயர்கள், இன்றைய மனித குலத்தின் கேள்விகளுக்கு இறைவார்த்தைகளில் பதிலைத் தேடி, கற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நீதிக்கும் பிறரன்பிற்கும் இடையே நிலவ வேண்டிய ஓர் ஆரோக்கியமான உறவு குறித்தும், தன்  உரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.