2016-11-19 16:47:00

மத நம்பிக்கைக்காக துன்புறுவோருக்கென ஒரு சிகப்பு புதன்


நவ.19,2016. உலகம் முழுவதும் தங்கள் மத நம்பிக்கைக்காகத் துன்புறுவோருடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் அடையாளமாக இங்கிலாந்தின் அனைத்து கோவில்களிலும், வரும் புதனன்று, சிகப்பு வண்ண விளக்குகள் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு, இணைந்து நடத்தும் இந்தச் சிறப்பு நிகழ்வில், கிறிஸ்தவப் பள்ளிகளின் மாணவர்களும் கலந்துகொள்ள, தங்கள் ஆர்வத்தை வெளியிட்டுள்ளனர்.

நவம்பர் 23, வரும் புதனன்று இடம்பெற உள்ள இந்த அடையாள ஒருமைப்பாட்டு நிகழ்வில், ஏனைய மதங்களும் இணந்து கொள்வதாக அறிவித்துள்ளன.

சிகப்பு புதன் என பெயரிடப்பட்டுள்ள இந்நாளில், 'விசுவாசத்திற்காகவும் விடுதலைக்காகவும் எழுந்து நில்லுங்கள்' என்ற வாசகத்துடன், இலண்டனின் அனைத்து மதக் கட்டிடங்கள் வழியாக பேருந்துப் பயணம் ஒன்றும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. இந்நாளில், மாணவர்கள் மற்றும் இளையோரின் பங்கேற்புடன், 'மத நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தப்படுவோருக்கென’ செப வழிபாடுகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.