2016-11-21 16:33:00

மீனவர் உலக நாளில் கர்தினால் பரோலின் வழங்கிய உரை


நவ.21,2016. மீன்பிடித் தொழில், உலக உணவு பாதுகாப்பு, மனித நலம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிற்கு இன்றியமையாததாக இருக்கும் அதே வேளை, சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் முக்கியத்துவம் நிறைந்தது என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

நவம்பர் 21, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட மீனவர் உலக நாளையொட்டி, உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமையகத்தில், நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், துவக்க உரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், மீன்பிடித் தொழிலில் பல இலட்சம் மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதே வேளையில், பல குடும்பங்களும், குழுக்களும், சமூகங்களும் இதை நம்பியே வாழ்கின்றன என்று கூறினார்.

மீன்பிடித் தொழில் துறையின் பொருளாதாரக் கண்ணோட்டம், வருங்காலத்தின் வளமான வாழ்வை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மனதில் கொண்டதாக அமையவேண்டும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

இத்தொழிலில் பல்லாயிரம் பேர் கட்டாய வேலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, அடிமைத்தொழில் என்பது மறைமுகமாக உயிருடன் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்ற கவலையையும் வெளியிட்டார், கர்தினால் பரோலின்.

மீன்பிடித் தொழிலில் பெரிய நிறுவனங்களால் பணிக்கு அமர்த்தப்படுவோர், வேலை நிரந்தரமற்ற நிலையால் அச்சத்துடன் வாழ்வது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது, நடுக்கடலில் கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கடத்தப்படுவது,  கடல்வழி வரும் புலம்பெயர்ந்தோர்  பிரச்சனை போன்றவை குறித்தும் தன் கருத்துக்களை FAO தலைமையகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசினார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.