2016-11-23 15:57:00

நல்ல நீர் அரிதாகி வருவது, புதிராக உள்ளது - பேராயர் அவுசா


நவ.23,2016. உலகப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிறைந்திருந்தாலும், நீரின் அளவு, மீண்டும், மீண்டும், குறையாமல் இருந்தாலும், நல்ல நீர் கிடைப்பது அரிதாகி வருவது, புதிராக உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் உலக அரங்கில் உரையாற்றினார்.

நவம்பர் 22, இச்செவ்வாயன்று, நியூ யார்க் நகரில், ஐ.நா. பாதுகாப்பு அவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற, பேராயர் பெர்னர்த்தித்தோ அவுசா அவர்கள், தண்ணீர் தட்டுப்பாடு, மனிதர்களின் தவறான ஆளுமையால் உருவாகும் பிரச்சனை என்று, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

"தண்ணீர், அமைதி, பாதுகாப்பு" என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், சுற்றுச்சூழல் சீரழிவினால், பல நாடுகளில் நிலத்தடி நீர், நச்சு கலந்த நீராக மாறிவருகிறது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நல்ல குடிநீர் கிடைக்காமல் போகும் நிலை, உலகின் பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றிற்கு ஆபத்தை உருவாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை முன்வைத்த பேராயர் அவுசா அவர்கள், வளர்ந்துவரும் வறிய நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு மிக ஆபத்தான அளவு உயர்ந்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது, உலக அமைதிக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளிலும், 'இறைவா உமக்கே புகழ்' திருமடலிலும் கூறியுள்ளதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.