2016-11-24 16:29:00

ஊழல், ஒருவகையான தெய்வ நிந்தனை – திருத்தந்தையின் மறையுரை


நவ.24,2016. பணத்தை வழிபடுவதற்கும், மற்றவர்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கும் நம்மை அழைத்துச் செல்லும் ஊழல், ஒருவகையான தெய்வ நிந்தனை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

நடைபெறும் திருவழிபாட்டு ஆண்டின் இறுதி வாரத்தின் திருப்பலியை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, இன்றைய வாசகங்களில் கூறப்பட்டுள்ள உலகின் முடிவு, பாபிலோன் மாநகரின் வீழ்ச்சி என்ற எண்ணங்களை தன் மறையுரையின் மையமாக்கினார்.

ஊழலின் அடையாளமாக விளங்கிய பாபிலோன் மாநகரம் வீழ்ந்ததுபோல், ஊழலை நம்பி, பணத்தை வழிபட்டு வாழ்வோரின் நிலையும் அழிவுக்கு உள்ளாகும் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

பாபிலோன் வீழ்ந்தது என்று குரலெழுப்பி கத்தும் தூதரின் குரலுக்கு ஒரு மாறுதலாக, இறைவனைப் புகழும் எளியோரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்று, தன் மறையுரையில், திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

நமது செபங்கள், பொதுவாக, விண்ணப்ப செபங்களாக இருப்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, இறைவனைப் புகழும் செபங்களையும் நாம் கற்றுக்கொள்வது நன்மை விளைவிக்கும் என்றும், இதனைக் கற்றுக்கொள்ள நாம் இறுதிக்காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.