2016-11-24 16:29:00

கொலம்பியாவில் கையெழுத்திடப்பட்ட புதிய அமைதி ஒப்பந்தம்


நவ.24,2016. ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த 50 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மோதலின் இறுதியில், கொலம்பியா அரசும், FARC எனப்படும் போராளிகள் குழுவும், நவம்பர் 24, இவ்வியாழனன்று ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஏற்கனவே 4 ஆண்டுகளாக அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப்பின் செப்டம்பர் 26ம் தேதி உருவான அமைதி ஒப்பந்தம், அக்டோபர் மாதம் நடந்த பொதுமக்கள் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது சிறு திருத்தங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்று அரசுத்தலைவருக்கும் FARC  புரட்சிக் குழுத் தலைவருக்குமிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஒப்பந்தம், புரட்சிக் குழுவுக்கு அதிக சலுகைகளை வழங்குகிறது என்ற காரணத்தால், மக்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

அரசுத்தலைவர் Juan Manuel Santosக்கும் FARC எனும் புரட்சிக் குழுவின் தலைவர் Rodrigo Londonoவுக்கும் இடையே தலைநகர் Bogotaவில் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், அந்நாட்டு காங்கிரஸ் அவையின் ஒப்புதலுக்கென அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கொலம்பியாவின் 52 ஆண்டு உள்நாட்டுப் போரில், 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர், பல இலட்சக்கணக்கானோர் குடிபெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.