2016-11-24 16:48:00

திருப்பலி, ஒப்புரவு அருளடையாளம் பற்றி அறியும் புதிய செயலி


நவ.24,2016. ஒருவர் தனக்கு அருகில் உள்ள கோவில்களில், எங்கு திருப்பலியும், ஒப்புரவு அருளடையாளமும் வழங்கப்படுகிறது என்பதை அறியும் செயலி ஒன்று, உலகிலேயே முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தொடர்பு முறைகள் வழியே, இறைவனின் இரக்கத்தையும், நற்செய்தியின் மகிழ்வையும் அறிந்துகொள்ள இந்தச் செயலியை தாங்கள் உருவாகியுள்ளதாக, ஸ்காட்லாந்து நாட்டின், St Andrews & Edinburgh உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Leo Cushley அவர்கள், ICN கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள "இரக்கமும், இழிநிலையும்" (Misericordia et misera) என்ற திருத்தூது மடலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தையின் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டவர்களில் ஒருவரான, பேராயர் Cushley அவர்கள், இச்செயலி வழியே மக்கள் பெறக்கூடிய நன்மைகளைக் குறித்துப் பேசினார்.

இறைவனின் இரக்கத்தை நடைமுறை வாழ்வுக்குக் கொணரும் திருப்பலி, மற்றும் ஒப்புரவு அருளடையாளம் குறித்து தேவையான விவரங்களை, GPS வசதியை உள்ளடக்கிய இச்செயலியை பயன்படுத்தி, ஒருவர் எளிதில் பெறமுடியும் என்று பேராயர் Cushley அவர்கள் விளக்கினார்.

இச்செயலியின் பயன்பாட்டை விரைவில் ஏனைய மறைமாவட்டங்களும் பயன்படுத்தும் என்று தான் நம்புவதாகவும், இறைவனின் இரக்கத்தை இவ்வாறு மக்கள் தொடர்ந்து சுவைக்க இது உதவும் என்றும், பேராயர் Cushley அவர்கள் எடுத்துரைத்தார்.

இரக்கத்தின் யூபிலி நிறைவுற்றாலும், இறைவனின் இரக்கத்தை எளிதில் பெறக்கூடிய ஒரு வழியைக் காட்டும் இச்செயலி வழியே, பலரும் பயனடைய முடியும் என்று, வத்திக்கான் தொடர்புத் துறைத் தலைவர், அருள்பணி Dario Viganò அவர்கள் ICN செய்தியிடம் கூறினார். 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.