2016-11-25 15:36:00

முதுபெரும் தந்தை கிரிலுக்கு திருத்தந்தை பிறந்தநாள் வாழ்த்து


நவ.25,2016. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை கிரில் அவர்களின் 70வது பிறந்தநாளுக்கு, தனது நல்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரஷ்யாவுக்குச் சென்றுள்ள, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்கள் வழியாக, இச்செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவில், தனது அன்புக்குரிய சகோதரரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ஆழ்ந்த செபங்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஹவானாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தடாக்ஸ் மற்றும், கத்தோலிக்கத் திருஅவைகளுக்கு இடையே, நல்லிணக்கநிலை ஏற்படுவதற்கு, முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு, தான் சிறப்பான முறையில், நன்றி கூறுவதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், நவம்பர் 20, கடந்த ஞாயிறன்று, தனது எழுபதாவது பிறந்தநாளைச் சிறப்பித்தார். இவர், 2009ம் ஆண்டிலிருந்து, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 

கர்தினால் கர்ட் கோக் அவர்கள் தலைமையில் சென்ற, திருப்பீடக் குழுவை வரவேற்று, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தியையும் பெற்ற முதுபெரும் தந்தை கிரில் அவர்கள், இரு சபைகளுக்கும் இடையே இடம்பெறும் பொதுவான முயற்சிகள் பற்றியும்,  ஹவானாவில், திருத்தந்தையைச் சந்தித்தது பற்றியும் கலந்துரையாடினார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.