2016-11-26 15:51:00

தனிவரத்திற்கு ஒத்தவகையில் பொருளாதாரத்தைச் சீர்தூக்கி...


நவ.26,2016. துறவிகள், தங்கள் சபைகளின் தனிவரத்திற்கு ஒத்தவகையில், பொருளாதாரம் பற்றி, சீர்தூக்கிப் பார்க்குமாறு, திருஅவையின் இருபால் துறவியர் சபையினரைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் இருபால் துறவியர் சபைகள், தங்கள் வரவு செலவு குறித்த தீர்மானங்களை, தகுந்த முறையில் எடுக்க உதவியாக, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு மற்றும் திருத்தூதுப் பணி அமைப்புக்களின் பேராயம், உரோம் நகரில் நடத்தும் மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் அதிகமான துறவியருக்கு, இச்சனிக்கிழமையன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிவரத்தின் அடிப்படையில், பொருளாதாரத்தைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு அழைப்பு விடுத்தார்.

இறைவார்த்தை மற்றும் வரலாற்றைக் கவனமாக வாசிப்பதன் வழியாக, பொருளாதராம் பற்றி சிந்தித்துப் பார்க்குமாறும் விண்ணப்பித்த திருத்தந்தை, சொத்துக்கள், இலாபத்தின் மற்றும் சந்தை மதிப்பீட்டின்படி நோக்கப்படுகின்றவா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்(1யோவா.3,17-18) என்ற திருத்தூதர் யோவானின் வார்த்தைகளையும்,

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்…’‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என இயேசு (மத்.25,31-46) கூறியதையும் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

நவம்பர் 25, இவ்வெள்ளி முதல், 27, இஞ்ஞாயிறு முடிய Antonianum பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில், உலகின் பல நாடுகளில், வரவு செலவு துறையில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருபால் துறவியர் கலந்துகொள்கின்றனர்.

நிதி குறித்து, திருஅவை மேற்கொள்ளும் அனைத்துச் செயல்பாடுகளிலும், இன்னும் அதிகமான வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்று, 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் தொடர் முயற்சியாக, இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கு, இரண்டாவது முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.