2016-11-29 15:34:00

எய்ட்ஸ், உயிர்க்கொல்லி நோய் என்ற நிலை மாறி வருகிறது


நவ.29,2016. இந்தியாவில் எய்ட்ஸ் நோய்க்கு, சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றபோதிலும், இதில், மேலும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று, இந்திய கத்தோலிக்க சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்தியா உட்பட, ஆசிய-பசிபிக் பகுதியில், எய்ட்ஸ் நோய்க்கு, சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறும் மக்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டிலிருந்து, இருமடங்காக  அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத் தலைவர் அருள்பணி மத்யூ ஆபிரகாம் அவர்கள், உலகில் வாழும் எய்ட்ஸ் நோயாளர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் இந்தியாவில் உள்ளனர் என்றும், இந்நோய், உயிர்க்கொல்லி அல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்நோயாளர் மத்தியில் பணியாற்றும், சமூக ஆர்வலர் ஜேம்ஸ் வெலியாத் அவர்கள், 21 இலட்சம் எய்ட்ஸ் நோயாளர்கள், வாழ்வைப் பாதுகாக்கும் மருந்துகளைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் எனினும், இத்துறையில் இன்னும் கடினமாக ஆற்றவேண்டிய பெரிய சவாலை, நாடு எதிர்கொள்கின்றது என்று தெரிவித்தார்.

2015ம் ஆண்டின் அறிக்கைப்படி, இந்தியாவில், 21 இலட்சம் பேர், எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர் எனவும், 2015ம் ஆண்டில், 86 ஆயிரம் பேர், புதிதாத, இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டனர் எனவும், 67 ஆயிரம் பேர் இதனால் இறந்தனர் எனவும் தெரிய வருகிறது.

டிசம்பர் 01, இவ்வியாழன் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள். 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.