2016-11-29 15:40:00

டில்லியைவிட சென்னையில் காற்று மாசு அதிகம்


நவ.29,2016. டில்லியைவிட சென்னையில், காற்று மாசு அதிகரித்துள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இத்திங்களன்று தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான அளவில் இருந்த காற்று மாசு, கடந்த 23ம் தேதி முதல், 200 மைக்ரோ கிராமுக்கு மேல் அதிகரித்துவரும் நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், டில்லியில், 229 மைக்ரோ கிராமும், சென்னையில், 239 மைக்ரோ கிராமும் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கிறது.

காற்று மாசை ஏற்படுத்தும், 10 ஆண்டுகள் பழமையான, டீசல் வாகனங்களுக்குத் தடை விதித்தது, தொழிற்சாலைப் பணிகளையும், கட்டுமானங்களையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது போன்ற, காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை, டில்லி அரசு மேற்கொண்டதால், தற்போது, காற்று மாசின் அளவு, டில்லியில் 229 மைக்ரோ கிராமாக குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் காற்று மாசின் அளவு, டில்லியைவிட, 10 மைக்ரோ கிராம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

சென்னையில், காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

காற்று மாசு அதிகரிப்பால், டில்லியில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.