2016-11-29 13:34:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 49


இரு வாரங்களுக்கு முன், நவம்பர் 13ம் தேதி, ஜப்பான் நாட்டின், கோரா (Kora) என்ற நகரில், வேகமாக உணவு உண்ணும் போட்டியொன்று நிகழ்ந்தது. 'ஒனிகிரி' (Onigiri) என்றழைக்கப்படும் சோற்று உருண்டைகள் ஐந்தினை, யார் விரைவாக உண்கின்றனர் என்பதே, போட்டி. இப்போட்டியில் பங்கேற்ற 15 பேரில், 28 வயதான ஓர் இளைஞர், 5 உருண்டைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வாயில் விரைவாகத் திணித்ததால், மூச்சடைத்து, மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூன்று நாட்கள் 'கோமா' நிலையில் இருந்து, பின்னர், மரணமடைந்தார்.

வேகமாக உண்ணும் போட்டிகள், அதிகமாக உண்ணும் போட்டிகள் போன்றவை, வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இத்தகையப் போட்டிகள், பழைய உரோமையக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த சில கேவலமானப் பழக்கங்களை நினைவுக்குக் கொணர்கின்றன. நாகரீகத்தின் உச்சியில் இருந்ததாக தங்களையே பறைசாற்றிக்கொண்ட உரோமையர்கள், விருந்து நேரத்தில் வயிறு நிறைய உண்டபின், தாங்கள் உண்டதை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, மீண்டும் உண்டனர் என்று வரலாறு சொல்கிறது. உரோமையக் கலாச்சாரத்தின் அழிவுக்கு, இத்தகைய வரம்பு மீறிய பழக்கங்கள் காரணமாக இருந்தன என்பது, வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

உண்ணுதல் என்பது, அடிப்படை மனிதத் தேவை. அதனை, நிதானமாக, அமர்ந்து, சுவைத்து, உண்பது, நலனையும், நீண்ட ஆயுளையும் தரும் என்று, நம் முன்னோர் நம்பி வந்தனர்.

உண்பதைப் பற்றிய பாடங்களை, நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களிடமிருந்து கற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். மிருகங்கள், பசித்தால் மட்டுமே உண்ணும். தன் தேவை நிறைவானதும், அவை உண்பதில்லை. உண்ணும்போது, அவை, அவசர, அவசரமாக விழுங்குவதும் கிடையாது. மாடுகள், தாங்கள் உண்டதை மீண்டும் அசைபோடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். மனிதர்களாகிய நாம் மட்டுமே, தேவையில்லாதபோது உண்பது, தேவைக்கும் அதிகமாக உண்பது, விரைவாக விழுங்குவது போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொண்டு, உடல் நலத்தை இழந்து தவிக்கிறோம். நம் தவறான பழக்கங்களை மூலதனமாக்கி, துரித உணவகங்கள் ஊரெங்கும் வளர்ந்துவிட்டன.

உண்பது உட்பட, அனைத்தையும் விரைவாகச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திவரும் இவ்வுலகப் போக்கிற்கு ஒரு மாற்று அடையாளமாக, ஒரு சில இயக்கங்கள் இவ்வுலகில் உருவாகி வருவது, மனதுக்கு ஆறுதலான செய்தி. அவற்றில் ஒன்றான, 'நிதான உணவு' (Slow Food) என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, 'நிதான இயக்கம்', 'நிதான நகரம்' என்ற முயற்சிகள்.

மெக்டானல்டு (McDonald's) என்றழைக்கப்படும் பன்னாட்டு உணவு நிறுவனம், 1986ம் ஆண்டு, உரோம் நகரின் புகழ்பெற்ற 'இஸ்பானிய சதுக்க'த்தில், ஒரு துரித உணவகத்தைத் (Fast food) திறப்பதற்கு முயன்றபோது, எதிர்ப்புகள் எழுந்தன. இந்த எதிர்ப்புப் போராட்டம் புதுவகையில் வெளிப்பட்டது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய கார்லோ பெத்ரீனி (Carlo Petrini) என்பவர், துரித உணவகம் என்ற கருத்துக்கு மாற்றாக, 'நிதான உணவு' (Slow Food) என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

நாளடைவில், இந்த இயக்கம், 'நிதான நகரம்' (Cittaslow) என்ற எண்ணமாக உருவெடுத்தது. இயற்கையில் விளையும் உணவு, சுத்தமான காற்று, நீர் என்பன போன்ற 54 அம்சங்களை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நகரங்கள், ஆஸ்திரேலியா முதல், கனடா முடிய, 30க்கும் அதிகமான நாடுகளில் இயங்கி வருகின்றன.

இந்த இயக்கத்தையும், இத்தகைய வாழ்வியலையும் குறித்து, கனடா நாட்டு செய்தித் தொடர்பாளர், கார்ல் ஒனோரே (Carl Honoré) என்பவர், "In Praise of Slowness: Challenging the Cult of Speed" அதாவது, "நிதானத்தின் புகழ்: வேகம் என்ற சடங்கு முறைக்குச் சவால்" என்ற நூலை, 2004ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'நிதான இயக்கம்' (Slow Movement) பற்றி இவர் கூறும் கருத்துக்கள் ஆழமானவை:

"அதிவேகம் சிறந்தது என்ற எண்ணத்திற்கு எதிர்ப்பாக எழுந்துள்ள கலாச்சாரப் புரட்சியே, நிதான இயக்கம். 'நிதானம்' என்றதும், அனைத்தையும் நத்தையைப்போல் மெதுவாகச் செய்வது அல்ல. அனைத்தையும், அவற்றிற்குத் தேவையான, பொருத்தமான வேகத்துடன் செய்வதே, நிதான இயக்கம். நாம் செலவழிக்கும் மணித்துளிகளை, ஓர் எண்ணிக்கையாக மட்டும் காணாமல், அவற்றை சுவைத்து வாழ்வது. செய்வதனைத்தையும் துரிதமாகச் செய்வதற்குப் பதில், செவ்வனே செய்வது. நமது வேலை, உணவு, குழந்தை வளர்ப்பு ஆகிய அனைத்திலும், அளவைவிட, தரத்தை உறுதி செய்வது. இதுவே, நிதான இயக்கம்."

நிதான உணவு, நிதான நகரம், நிதான இயக்கம் ஆகிய கருத்துக்களை இன்று நாம் சிந்திப்பதற்கு, காரணம் உள்ளது. இந்த விவிலியத்தேடலில் நாம் 'அசைபோட' வந்திருக்கிறோம். துரித உணவை விழுங்கிய வண்ணம், உலகப் பாதையில் விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், எவ்வித பரபரப்பும் இன்றி, தான் உண்டதை அசைபோட்டபடி அமர்ந்திருக்கும் மாடு, நம் விவிலியத்தேடலுக்கு ஓர் அடையாளமாக அமைகிறது.

சென்ற ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி முதல், இவ்வாண்டு நவம்பர் 20ம் தேதி முடிய, நாம் அருள் மிகுந்த, ஓர் அற்புத காலத்தில் பயணித்தோம். சரியாக 349 நாட்கள் நாம் கடந்துவந்த இப்பயணத்தை, 'இரக்கத்தின் சிறப்பு யூபிலி' என்றழைத்தோம். இந்த யூபிலி, ஒரு வரலாற்று நினைவாக மட்டும் இருந்துவிடாமல், நம் வாழ்வில் தொடர்ந்து தாக்கங்களை உருவாக்கும் அருள் மிகுந்த காலமாக மாறவேண்டுமெனில், இந்த ஆண்டு நிகழ்ந்தவற்றை சிறிது ‘அசைபோடுவது’ பயனளிக்கும். இதை மனதில் கொண்டு, இன்றும், இனி வரும் தேடல்களிலும் 'அசைபோட' முயல்வோம்.

2015ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற 2ம் ஆண்டு நிறைவு பெற்றது. அன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், 'இறைவனுக்கு 24 மணி நேரங்கள்' என்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார். அந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் அவர் வழங்கிய மறையுரையின் இறுதி சில நிமிடங்களில், ஆனந்த அதிர்ச்சியொன்றை அகில உலக கத்தோலிக்க சமுதாயத்திற்கு வழங்கினார்:

"அன்பு சகோதர, சகோதரிகளே, 'இரக்கத்தின் சாட்சி’ என்ற மறைப்பணியை, திருஅவை இவ்வுலகில் எவ்விதம் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்று நான் அடிக்கடி சிந்தித்துள்ளேன். எனவே, இறைவனின் இரக்கத்தை மையப்படுத்தி, சிறப்பு யூபிலி ஒன்றை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இது இரக்கத்தின்  ஆண்டாக இருக்கும். இறைவனின் இரக்கத்தை மீண்டும் ஒருமுறை தேடிக் கண்டுபிடிக்கவும், பறைசாற்றவும், இந்த யூபிலி உதவி செய்யும் என்று நம்புகிறேன்."

அற்புதமான இந்த வார்த்தைகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை அறிவித்தார். சென்ற ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியாவின் பெருவிழாவன்று, இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஆற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், பேராலய முகப்பில் அமைந்துள்ள புனிதக்கதவை திறந்து, இந்த யூபிலி ஆண்டினைத் துவக்கிவைத்தார்.

1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றது. அந்நிகழ்வின் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2ம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவை, யூபிலியாகக் கொண்டாடுவது பொருத்தம்தான் என்றாலும், அந்தக் கொண்டாட்டத்திற்கு ஏன் இரக்கத்தின் சிறப்பு யூபிலி என்ற மையக்கருத்தை திருத்தந்தை தேர்ந்தார் என்ற கேள்வி எழுந்தது.

இக்கேள்விக்குப் பதில் தருவதுபோல், 'இரக்கத்தின் முகம்' (Misericordiae Vultus) என்ற பெயரில், இந்த யூபிலி ஆண்டைக் குறித்து வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வமான ஆவணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, ஆழமாக விளக்கியிருந்தார். திருத்தந்தை வழங்கிய விளக்கம் இதோ:

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக, திருஅவை, தன் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தது. இறைவன், மனிதர்களுக்கு நெருக்கமானவர் என்ற பாணியில் பேச, சங்கத்தின் தந்தையர் தீர்மானித்தனர். அதேவண்ணம், மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த கோட்டைபோல் தோன்றிய திருஅவை, அந்நிலையிலிருந்து வெளியேறி, புதிய வழியில் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்றும் சங்கத் தந்தையர் முடிவெடுத்தனர்.

2ம் வத்திக்கான் சங்கம் துவக்கிவைத்த இந்த மாற்றங்களுக்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, சங்கத்தின் துவக்கத்திலும், முடிவிலும் பேசிய இரு திருத்தந்தையரின் வார்த்தைகள் வழியே நினைவு கூர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 2ம் வத்திக்கான் சங்கத்தின் துவக்கத்தில், புனித 23ம் ஜான் கூறிய மனதைத் தொடும் வார்த்தைகள் இதோ:

“கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, தன் கண்டிப்பான கரத்தை உயர்த்துவதற்குப் பதில், இரக்கத்தின் மருந்தைப் பயன்படுத்த விரும்புகிறார். பொறுமை, கனிவு, பரிவு கொண்ட அன்னையாக, அனைவருக்கும், குறிப்பாக, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகளுக்கு, தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார்” என்ற கனிவானச் சொற்களுடன் திருத்தந்தை, புனித 23ம் ஜான் அவர்கள், வத்திக்கான் சங்கத்தைத் துவக்கிவைத்தார். அதே கனிவுடன், சங்கத்தின் இறுதியில் அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் இவ்வாறு பேசினார்:

"2ம் வத்திக்கான் சங்கத்தின் தலையாயப் பண்பாக விளங்கியது, பிறரன்பு. நல்ல சமாரியர் என்ற மனநிலையே சங்கத்தின் ஆன்மீகமாக விளங்கியது. திருஅவையும், ஏனையச் சபைகளும் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் பாசமும், மதிப்பும், இச்சங்கத்தில் வெளிப்பட்டன. குற்றங்கள் கடிந்துகொள்ளப்பட்டன; ஆனால், தவறு செய்தவர் மீது, அன்பும், மதிப்பும் காட்டப்பட்டன. நம்மைப் பீடித்துள்ள நோய்களைக் குறித்து, மனம் தளரும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில், மனதைத் தேற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன."

இரக்கத்தை வலியுறுத்தி, திருத்தந்தையர் இருவரும் கூறிய வார்த்தைகளை தன் ஆவணத்தில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தை, திருஅவை தொடர்ந்து சுவைக்கவும், குறிப்பாக, வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு, கதறியழும் மனித குலத்திற்கும், பூமிக் கோளத்திற்கும் இரக்கம், மிக, மிக அவசியமான மருந்து என்பதை மனிதர்களாகிய நாம் உணரவும், இந்த யூபிலி ஆண்டு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விழைந்தவாறு, இந்த யூபிலி ஆண்டில், இரக்கம் என்ற எண்ணம், கத்தோலிக்கத் திருஅவையைத் தாண்டி, ஏனைய மதத்தினரையும், உலக அரசுகளையும், அமைப்புக்களையும் தொட்டுள்ளது என்பதை நாம் மனநிறைவோடு அசைபோட்டு பார்த்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.