2016-11-30 15:47:00

இறையழைத்தலுக்குச் செபிக்கும் 54வது உலகநாள் செய்தி


நவ.30,2016. இறைவனின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவைத் தொடர விழைவோர், நற்செய்தியை தங்கள் சகோதர, சகோதரிகளுக்கு வழங்கும் கட்டுக்கடங்காத ஆவலைக் கொண்டிருப்பர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள ஓர் உலகச் செய்தியில் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு, மேமாதம் 7ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் இறையழைத்தலுக்குச் செபிக்கும் 54வது உலகநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தி, நவம்பர் 30, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பவர், சுயநலத்தைவிட்டு வெளியேறுவர் என்பதையும், இறைமக்களின் குழுமத்தில் இறையழைத்தல் உண்டாகிறது என்பதையும் கடந்த இரு ஆண்டுகளாக தன் செய்திகளில் வழங்கியுள்ளதாக இச்செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ள திருத்தந்தை, இவ்வாண்டு, கிறிஸ்தவ அழைப்பின் மறைபரப்புப் பணி என்ற அம்சத்தைச் சிந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஒருவர் தன் வாழ்வில் உணரும் கடவுளின் அன்பு, அவருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட ஆறுதலாக, தனிப்பட்ட சொத்தாகக் கருத்தப்படக்கூடாது என்று தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, அந்த அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்வது ஒன்றே, அந்த அன்புக்கு நாம் ஆற்றும் பதிலிறுப்பு என்று வலியுறுத்தியுள்ளார்.

மறைபரப்புப்பணி, கிறிஸ்தவ வாழ்வில் இணைக்கப்பட்ட ஒரு வெளி அலங்காரம் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பரப்புவது, நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள கட்டளை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிறிஸ்துவையும், நற்செய்தியையும் அறிவிப்பது, அனைத்து கிறிஸ்தவர்களின் கடமை என்றாலும், அர்ப்பண வாழ்வைத் தேர்ந்துள்ள அருள்பணியாளர், துறவியர் அனைவருக்கும் இது தலையாயக் கடமை என்பதை, திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தன் பணி வாழ்வை அறிவித்த இயேசு (காண்க. லூக்கா 4:16-30), எம்மாவு சென்ற சீடர்களோடு பயணித்த இயேசு (காண்க. லூக்கா 24:13-35), மற்றும், தானாக வளரும் விதை உவமை (காண்க மாற்கு 4:26-27) என்ற மூன்று எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, மறைபரப்புப் பணி குறித்து எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு இந்த நற்செய்தி பகுதிகள் பதிலாக அமைகின்றன என்று கூறியுள்ளார்.

மத நம்பிக்கை மீது பற்று குறைந்து வரும் இன்றைய உலகில், கிறிஸ்துவின் மீதும், நற்செய்தியின் மீதும் ஆழ்ந்த பற்றினை வளர்ப்பதும், அதனை பிறருடன் பகிந்துகொள்வதும், கிறிஸ்துவின் சீடர்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும், நான்காம் ஞாயிறான நல்லாயன் ஞாயிறை, இறையழைத்தலுக்குச் செபிக்கும் உலகநாளென 1963ம் ஆண்டு, திருத்தந்தை, அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் அறிவித்தார்.

2017ம் ஆண்டு, மே மாதம் 7ம் தேதி சிறப்பிக்கப்படும் இறையழைத்தலுக்காக செபிக்கும் 54வது உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளச் செய்தி, இப்புதனன்று வெளியானது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.