2016-11-30 16:23:00

கொலம்பியா விமான விபத்து – திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


நவ.30,2016. கொலம்பியா நாட்டில், நவம்பர் 28, திங்கள் இரவு நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தன் செபங்களையும், இறந்தோர் குடும்பங்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் வழங்கும் தந்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

பிரேசில் நாட்டு ஆயர் பேரவையின் தலைவரும், பிரேசில் உயர்மறைமாவட்ட பேராயருமான கர்தினால் Sérgio da Rocha அவர்களுக்கு, திருத்தந்தையின் சார்பில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சப்பகோயென்ஸே (Chapecoense) என்ற கால்பந்து அணியினருக்கென தனிப்பட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விமானத்தில் பயணம் செய்த 77 பேரில் 6 பேர் மட்டுமே விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.

தங்களின் கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய போட்டி என்று கூறப்பட்ட தென் அமெரிக்க கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் விளையாட, சப்பகோயென்ஸே அணியினர், கொலம்பியாவுக்கு விமானத்தில் சென்றனர்.

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் தனது அணிவீரர்கள் பெரும்பாலானோரை இழந்துள்ள சப்பகோயென்ஸே கால்பந்து அணியினரின் துக்கத்தில், ஒட்டுமொத்த கால்பந்து உலகம் பங்கேற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.