2016-11-30 16:16:00

பிரெஞ்சு நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்தித்தத் திருத்தந்தை


நவ.30,2016. நம்பிக்கை முற்றிலும் இழந்த நிலையில் பெருகிவரும் கண்மூடித்தனமான வன்முறைகள் நடுவே, பொது நலனை கட்டிக்காப்பதும், வளர்ப்பதும் நாளுக்கு நாள் முக்கியமாகி வருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை சந்திக்க வந்திருந்த பிரெஞ்சு நாட்டு அரசியல் தலைவர்களிடம் கூறினார்.

பிரெஞ்சு நாட்டின் Rhône-Alpes பகுதியில் பணியாற்றும் 260க்கும் மேற்பட்ட அரசியல் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், லியோன் பேராயர், கர்தினால் Philippe Barbarin தலைமையில் உரோம் நகருக்கு மேற்கொண்ட திருப்பயணத்தில், இப்புதன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்தனர்.

இப்புதன் காலை 9 மணியளவில், இப்பிரதிநிதிகளை வத்திக்கான் கிளமென்டீன் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இப்பிரதிநிதிகளின் வருகை, இரக்கத்தின் யூபிலி ஆண்டினை, நீடிக்கச் செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

சுதந்திரம், சமத்துவம், உடன்பிறந்த உணர்வு, ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிரெஞ்சு அரசியல், இன்றையச் சூழலில் தன் அடையாளத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளது என்று, திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

பொதுநலன் என்ற உன்னதமான உண்மை, பல்வேறு வழிகளில் பொருள் காணப்படும் இன்றைய நாள்களில், மக்களின் நலனை முன்னிறுத்தி, மனிதாபிமானம் மிக்க சமுதாயத்தை உருவாக்குவது, அரசியல் தலைவர்களின் இன்றியமையாதக் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.