2016-12-02 16:01:00

உலக அடிமைமுறை ஒழிப்பு நாள் டிசம்பர் 02


டிச.02,2016. கட்டாய வேலை, சிறார் தொழிலின் மிக மோசமான நிலைகள், கட்டாய மற்றும் சிறுவயது திருமணம், கொத்தடிமை, மனித வர்த்தகம் போன்ற, இக்காலத்திய அனைத்து அடிமைமுறைகளை ஒழிப்பதில், எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைச் சிந்திக்குமாறு, உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

டிசம்பர் 02, இவ்வெள்ளியன்று, கடைப்பிடிக்கப்பட்ட, உலக அடிமைமுறை ஒழிப்பு நாளுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகெங்கும், அடிமைமுறைகளுக்குப் பலியாகுவோர் குறித்துச் சிந்திப்பதற்கு, இந்த உலக நாள் அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

1926ம் ஆண்டில் அமலுக்கு வந்த அடிமைமுறை ஒழிப்பு ஒப்பந்தத்தின் 90ம் ஆண்டு நிறைவும், 1956ம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தோடு சேர்க்கப்பட்ட மற்றுமோர் ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் 60ம் ஆண்டு நிறைவும், இவ்வாண்டில் நினைவுகூரப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.

சிறார் தொழிலின் மிக மோசமான நிலைகளைக் களைவதில், சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நவீன அடிமைமுறைகளில், வலுவற்ற புலம்பெயர்ந்தவர்கள்  ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருவது கவலை தருகின்றது எனவும், பான் கி மூன் அவர்களின் செய்தி கூறுகிறது.

ஐ.நா.வின் உலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி, இன்று, உலகில், ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் பேர், கட்டாயத் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ள, பான் கி மூன் அவர்கள், இவற்றை ஒழிப்பதற்கு, உலகின் அனைத்துத் துறையினருக்கும், இந்த உலக நாளில், தான் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.