2016-12-03 15:30:00

உலகில் மூன்று பேரில் ஒருவருக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறை


டிச.03,2016. இப்புவியில் வாழும் மக்களில், மூன்று பேருக்கு ஒருவர் வீதம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறுவதாகவும், இந்நிலை, பொது நலத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும், ஆண்டுக்கு, 3.5 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துவதாகவும், ஐ.நா. கூட்டமொன்றில் கூறப்பட்டது.

உணவுப் பொருள்களையும், உணவு அமைப்புகளையும் மேம்படுத்துவது குறித்து, ஐ.நா.வின், FAO என்ற உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், உரோம் நகரில் நடத்திய, பன்னாட்டு கூட்டத்தில் பேசிய, அந்நிறுவன இயக்குனர் José Graziano da Silva அவர்கள், ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்சனை நிலவுகின்றது என்று எச்சரித்தார்.

ஊட்டச்சத்து விவகாரம், ஒவ்வொரு நாட்டையும் சார்ந்தது  என்பதால், இது, ஒரு பொது விவகாரமாக நோக்கப்படுமாறு கேட்டுக்கொண்ட அவர், வேளாண்மை மற்றும் அறுவடைக்குப் பின்னர், தானியங்கள் பாதுகாக்கப்படும் முறையில் கவனம் செலுத்துவதற்கு, அரசுகள் ஆவன செய்யுமாறும் வலியுறுத்தினார்.

மேலும், தென் சூடானில், ஏறக்குறைய 53 இலட்சம் மக்கள் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப் பேர், போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள தென் சூடானில், உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு நடைபெற்றுவரும் சண்டை காரணமாகவும், உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.