2016-12-07 16:06:00

திருத்தந்தை: ஒப்புரவுகளே, யூபிலி ஆண்டு தந்த சிறந்த பரிசு


டிச.07,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் கனிகள், மத சார்பற்ற நிலை, ஐரோப்பாவில் இளையோர் சந்திக்கும் சவால்கள் ஆகிய கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஐரோப்பிய வார இதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் கத்தோலிக்க வார இதழான Tertioவில் இப்புதன் காலை வெளியான இப்பேட்டியில், மதமும் அரசியலும் கலக்காமல் இருந்தது, பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்ட நிலைப்பாடு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மதங்களை முன்னிலைப்படுத்தி அடக்கு முறைகளை மேற்கொள்ளும் அரசுகளைக் காட்டிலும், மத சார்பற்ற அரசுகள் மேல் என்று கூறும் திருத்தந்தை, மத சார்பற்ற அரசு, இவ்வுலகைத் தாண்டிய உண்மைகளை நோக்கி திறந்தமனம் கொண்டிருக்கும்வரை, நன்மைகளைக் கொணரும் என்பதையும் தன் பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மதத்தின் பெயரால் போரையும் வன்முறைகளையும் தூண்டும்போது, அத்தகைய கடவுள், வெறுப்புக்கும், அழிவுக்கும் காரணமான கடவுள் என்று அறிக்கையிடப்படுகிறார் என்றும், அத்தகைய மதமும், அத்தகையக் கடவுளும், மதத்தை நோயுறச் செய்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

முதல் உலகப் போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் சென்றபின்னரும், ஐரோப்பா சிறு, சிறு போர்களில் தன் சக்தியையும், இரத்தத்தையும் இழந்து வருகிறது என்று கூறியத் திருத்தந்தை, போர்களை வர்த்தகம் செய்யும் ஆயுத உற்பத்தியாளர்களை, எதிர்க்கும் துணிவு கொண்ட தலைவர்கள் ஐரோப்பாவிற்குத் தேவை என்று எடுத்துரைத்தார்.

அண்மையில் முடிவடைந்த இரக்கத்தின் யூபிலி குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்தத் திருத்தந்தை, இந்த எண்ணம் இறைவனிடமிருந்து தூண்டப்பட்ட எண்ணம் என்றும், இந்த யூபிலியின் வழியாக இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் உருவான ஒப்புரவுகளே இவ்வாண்டு தந்த மிகச் சிறந்த பரிசு என்றும், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஊடகங்களைப் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களுக்கு தேவையான செய்திகளை வழங்கும் உயர்ந்த பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்திக் கூறியபின், தவறான செய்திகள் மக்களை பாதிப்பதுபோல், பயனற்ற செய்திகளும் மக்களைத் தடுமாறச் செய்கின்றன என்று, தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

Tertio வார இதழுக்கு அளித்த இப்பேட்டியில், இறுதியாக, அருள்பணியாளர்களைப் பற்றி பேசியத் திருத்தந்தை, காயப்பட்ட இயேசுவின் உடலான திருஅவையை, மென்மையுடன் பேணிக்காப்பதற்கு அருள்பணியாளர்கள் தயங்கக்கூடாது என்றும், இவ்வுலகிற்கு இன்று தேவையானது, ஒரு மென்மைப் புரட்சி என்றும் கூறி, தன் பேட்டியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.