2016-12-08 16:19:00

அனைவருக்கும் உயிர் காக்கும் மருந்துகள் - பேராயர் Jurkovič


டிச.08,2016. உயிர் காக்கும் மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதை உலக சமுதாயம் உறுதி செய்யவேண்டும் என்பதை, திருப்பீடம் முழுமையாக பரிந்துரைக்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவை கூட்டமொன்றில் உரையாற்றினார்.

ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகத்தின் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், HIV, AIDS குறித்த விவாதங்களில் டிசம்பர் 7, இப்புதனன்று கலந்துகொண்ட வேளையில், இவ்வாறு பேசினார்.

நோய் தடுப்பு, நோய்களைத் தீர்க்கும் மருத்துவ வசதிகள் ஆகியவை, அனைத்து மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமை என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளதை பேராயர் Jurkovič அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அறிவியலும், தொழில்நுட்பமும் வியக்கத்தக்க வகையில் வளர்ந்திருந்தாலும், அவை, மனித உயிர்களை, குறிப்பாக, வறியோரின் உயிர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டதை, பேராயர் Jurkovič அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.