2016-12-08 16:14:00

சுவிட்சர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை


டிச.08,2016. ஒவ்வொரு மனிதரும், தங்கள் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை விட, அடுத்தவர் உரிமைகளை உறுதி செய்யும் முயற்சிகளை கூடுதலாக மேற்கொள்ளவேண்டும் என்பது, கத்தோலிக்க, கிறிஸ்தவ நிலைப்பாடு என்று, சுவிட்சர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

டிசம்பர் 10, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் மனித உரிமைகள் நாளையொட்டி, சுவிட்சர்லாந்து கத்தோலிக்க ஆயர்களும், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இன்றைய உலகில் மனித உரிமை மீறல்கள் பெருகி வருவது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தை, வயது முதிர்ந்தவர்கள், புலம் பெயர்ந்து, புகலிடம் இன்றி வாழ்பவர்கள், வறியோர் என்று இவ்வுலகில் பல குழுவினர் தங்கள் உரிமைகள் அனைத்தையும் இழந்திருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் அநீதி என்று, கிறிஸ்தவ தலைவர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மனித உரிமையின் அடித்தளமான மனித மாண்பு, ஒருவருக்கு பிறவிலேயே உள்ளது என்றும், பயனுள்ளவர், பயனற்றவர் என்ற பாகுபாட்டினால் மனித மாண்பு மறுக்கப்படுவது முற்றிலும் தீமையான ஓர் எண்ணம் என்றும், இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் மனித உரிமைகள் நாளையொட்டி, சுவிட்சர்லாந்தின் சிறைகளில் உள்ள கைதிகளுக்குத் தகுந்த மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை, கிறிஸ்தவ தலைவர்கள் சிறப்பான ஒரு விண்ணப்பமாக தங்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.