2016-12-09 16:24:00

உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் அமைத்தல் நிறுத்தம்


டிச.09,2016. உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கும் இலங்கையின் முயற்சி, ஏழைகளின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவு என கணக்கிடப்பட்டு துவக்கப்பட்ட இந்த பணி, பாதி நிறைவேறிக்கொண்டிருந்தபோது, இப்பணத்தை வீணடிக்காமல்,  ஏழை மாணவர்களின் படிப்புக்கும், வறியோருக்கான வீடு கட்டுவதற்கும் செலவழிக்க வேண்டும் என, கொழும்பு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, செயற்கை கிறிஸ்துமஸ் மரம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

கர்தினாலின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இப்பணியில் ஈடுபட்ட குழுவின் தலைவர் மங்கள குணசேகர, மற்றும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய துறைமுக அமைச்சர் அர்ஜுன இரணதுங்கா ஆகியோருடன், இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப்பின், இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரத்தை கட்டியெழுப்பும் பணிக்கென செலவிடப்பட்ட பணம் அனைத்தும், தனியார் மற்றும் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டதாகவும், நாட்டின் பல்வேறு மதங்களிடையிலும், இனங்களிடையிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்தார் இப்பணிக்குழுவின் தலைவர் குணசேகர.

UCAN செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, 96 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட திட்டமிடப்பட்ட இந்த கிறிஸ்மஸ் மரத்தின் பணி, 18 மீட்டருடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, மற்றும், திட்டமிடப்பட்ட செலவில் பாதி அதாவது, 60 இலட்ச ரூபாய் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.