2016-12-09 15:55:00

திருத்தந்தை: இனப்படுகொலையில் இறந்தோருக்காக செபிப்போம்


டிச.09,2016. "இனப்படுகொலையில் இறந்த அனைவருக்காகவும் செபிப்போம்; இந்தக் குற்றம் இனி உலகில் ஒருபோதும் ஏற்பாடாமலிருக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில், டிசம்பர் 9, இவ்வெள்ளியன்று பதிவு செய்துள்ளார்.

இனப்படுகொலையில் இறந்தோரை நினைவுகூரவும், மதிப்பளிக்கவும் ஐ.நா. அவை உருவாக்கிய உலக நாள், டிசம்பர் 9 இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தி ஐ.நா. அவை இந்த உலக நாளை, 2015ம் ஆண்டு முதல்முறையாகக் கடைப்பிடித்தது.

இரண்டாவது முறையாக கடைபிடிக்கப்படும் இந்த உலக நாளன்று, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் வேளையில், இந்தக் கொடுமையைத் தடுக்க நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிசெய்வோம் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் இந்நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் இறுதியில், 1948ம் ஆண்டு இனப்படுகொலை குற்றம் புரிந்தோரைத் தண்டிக்கவும், இந்தக் குற்றத்தைத் தடுக்கவும் ஐ.நா. அவை உறுதிமொழி எடுத்திருந்தாலும், இந்தக் குற்றம் இன்னும் இவ்வுலகில் பரவி வருகிறது என்று, பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.

"நாம் அவர்கள்" என்ற பாகுபாடுகள் பல வழிகளில் இன்று உலகெங்கும் பரவியுள்ளன என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டும் பான் கி மூன் அவர்கள், குறுகிய கண்ணோட்டங்களை விடுத்து, பரந்துபட்ட கண்ணோட்டத்தை வளர்ப்பதால் மட்டுமே இனப்படுகொலைகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று கூறியுள்ளார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.