2016-12-09 14:20:00

திருவருகைக்காலச் சிந்தனை : கண்டுகொள்வோம்


தனக்கான வழிகளைச் சீர்படுத்த வந்த எலியாதான் யோவான் என்பதனை மக்கள் கண்டுணரவில்லை என்கிறார், இயேசு. அதைபோல் இன்றும் இயேசுவின் அருளையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் எங்கெங்கோ தேடுகின்றோம். மாபெரும் புரட்சிகளிலும், மகத்தான செயல்களிலும், மிகப் பெரிய அறிகுறிகளிலும் தேடிக்கொண்டு நம் கண்முன்னே  இருக்கின்ற இறையன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கண்டுக்கொள்ள மறந்து விடுகின்றோம்.

ஆம், அடுத்திருப்பவரிடம் நாம் கொள்ளும் நட்பிலும்  அன்பிலும், குழந்தைகளின் மனமகிழ்ச்சியிலும், இயற்கையின் சிறப்பிலும், ஏழைகளின் சிரிப்பிலும் இறை அன்பையும், மகிழ்ச்சியையும் கண்டுக்கொள்ள மறந்துவிடுகின்றோம்.

நம் வளர்ச்சிக்காக பிறர் செய்கின்ற தியாகத்தில், நம் மேன்மைக்காக உழைப்பவர்களின் உழைப்பில், நம் நன்மைக்காக பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பில், இறை அருளையும், மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள மறந்துவிடுகின்றோம்.

இவ்வாறாக, நம் அருகில் இருப்பனவற்றை விட்டுவிட்டு, எங்கேயோ தேடிச் செல்கின்றோம். எனவே, நம்மைச் சுற்றி வலம்வரும் இயேசுவின் அருளையும், அன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள முற்படுவோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.