2016-12-09 15:47:00

வத்திக்கானில் கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம், துவக்கம்


டிச.09,2016. டிசம்பர் 9, இவ்வெள்ளி மாலை 4.30 மணியளவில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்து பிறப்பு காட்சியமைப்பும், கிறிஸ்மஸ் மரமும், விளக்கேற்றி துவக்கி வைக்கப்படுகின்றன.

25 மீட்டர் உயரம் கொண்டு, 90 ஆண்டுகள் நிறைவுசெய்துள்ள  கிறிஸ்மஸ் மரம், இத்தாலியின் திரிதெந்து பகுதியின், Lagorai காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தாலியில், புற்றுநோய் உட்பட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் உருவாக்கியுள்ள பல்வேறு வடிவங்கள், இந்த கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

நோயுற்ற குழந்தைகளை படைப்பாற்றல் மிக்கச் செயல்களில் ஈடுபடுத்தும் மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியுள்ள "Lene Thun" என்ற அறக்கட்டளைக்கும், இந்த மரத்தை அலங்கரித்த குழந்தைகளுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

கிறிஸ்து பிறப்பு காட்சியை, மால்ட்டா உயர் மறைமாவட்டமும், மால்ட்டா அரசும் இணைந்து, வத்திக்கானுக்கு ஒரு கொடையாக வழங்கியுள்ளன என்றும், மால்ட்டாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு போட்டியில் வெற்றி பெற்ற Manwel Grech என்ற கலைஞரின் படைப்பாக, இந்த கிறிஸ்து பிறப்பு காட்சி அமைந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், டிசம்பர் 9ம் தேதி திறக்கப்பட்டுள்ள குடில், மற்றும் கிறிஸ்மஸ் மரம், 2017ம் ஆண்டு சனவரி 8ம் தேதி முடிய மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.