2016-12-10 15:49:00

பங்களாதேசுக்கு திருத்தந்தையை அழைக்க பிரதமர் திட்டம்


டிச.10,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்களாதேஷ் நாட்டுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று, தான் அழைப்பு கடிதம் ஒன்றை எழுதுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தெரிவித்தார்.

கர்தினாலாக புதிதாக உயர்த்தப்பட்டுள்ள, பங்களாதேஷின் டாக்கா பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள், பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களை, மரியாதை நிமித்தம்,  சந்தித்தபோது, இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில், பங்களாதேஷ் திருப்பீடத் தூதர், பேராயர் ஜார்ஜ் கொச்சேரி அவர்களும் கலந்துகொண்டார்.

பங்களாதேஷ் நாட்டின் ஆறு இலட்சம் கிறிஸ்தவர்கள் சார்பாக, பிரதமருக்கும், நாட்டிற்கும் எனது பிரமாணிக்கத்தை வெளிப்படுத்துகிறேன் என, பிரதமரிடம் கூறினார் புதிய கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ.

பங்களாதேஷ் நாட்டிற்கு, முதல்முறையாக, கர்தினால் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து, தான் மிகவும் மகிழ்வதாகவும், இந்த நியமனம், நாட்டிற்கு மிகுந்த பெருமையளிக்கின்றது எனவும் கூறினார்  பிரதமர் ஷேக் ஹசீனா.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த ஆண்டில், பங்களாதேஷிக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்கு ஆவல் கொண்டிருக்கிறார் என்பதை, கர்தினால் டி ரொசாரியோ அவர்கள் தெரிவித்தபோது, தானும் கைப்பட, அழைப்புக் கடிதம் ஒன்றை, திருத்தந்தைக்கு எழுதவிருப்பதாகத் தெரிவித்தார் பிரதமர் ஷேக் ஹசீனா.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.