2016-12-10 15:28:00

மனித உரிமைகள் காக்கப்பட நாம் அனைவரும் உறுதியுடன் உழைப்போம்


டிச.10,2016. “தங்களின் அடிப்படை மனித உரிமைகள், முழுமையாய் அங்கீகரிக்கப்படுவதிலிருந்து, எவரும் ஒதுக்கப்பட்டுவிடாமல் இருப்பதற்கு, நாம் எல்லாரும், உறுதியுடன் உழைப்போம்” என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில், இச்சனிக்கிழமையன்று பதிவு செய்துள்ளார்.

டிசம்பர் 10, இச்சனிக்கிழமையன்று, உலக மனித உரிமைகள் நாள், கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, இந்த உலக நாளையொட்டியதாய் அமைந்திருந்தது.

1948ம் ஆண்டில், ஐ.நா. பொது அவை கொண்டுவந்த, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 10ம் தேதியன்று, இந்த நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று, 1950ம் ஆண்டில், ஐ.நா. பொது அவை அறிவித்தது. இந்நாளில், ஐ.நா. மனித உரிமைகள் விருதும், உலக நொபெல் அமைதி விருதும் வழங்கப்படுகின்றன. 

மேலும், திருப்பீடத்திற்கான, பெனின் நாட்டு புதிய தூதர் Agnès Avognon Adjaho அவர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து, நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பாரிஸ் பல்கலைக்கழகத்தில், புவியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள Adjaho அவர்கள், திருப்பீட பொதுநிலையினர் அவையில் உறுப்பினர், திருப்பீட கலாச்சார அவையில் ஆலோசகர் உட்பட, பெனின் அரசிலும், சில முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். திருமணமான இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இன்னும், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தந்தை அலுவலகத்தின் வெளியுறவுத் துறை தலைவர், Volokolamsk பேராயர் Hilarion அவர்களையும், இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.