2016-12-12 16:04:00

திருத்தந்தை : வன்முறை என்பது குணமளிக்கும் மருந்தாக முடியாது


டிச.12,2016. பேராசை கொண்ட தேசிய வாதங்களினாலோ, வன்முறைகளின் ஆதிக்கத்தாலோ, அடக்குமுறைகளின் வெற்றியாலோ கிடைப்பதல்ல அமைதி, மாறாக, மனிதகுல வளர்ச்சிக்கான உண்மை பாதை அது என, திருத்தந்தை அருளாளர், ஆறாம் பவுல் அவர்கள், தன் முதல் அமைதி தினச் செய்தியில் கூறியதை மீண்டும் எடுத்தியம்பி, திரு அவையின் 50வது உலக அமைதி தினச் செய்தியை துவக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

சனவரி மாதம் முதல் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக அமைதி தினத்திற்கான செய்தியை இத்திங்களன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த நூற்றாண்டின் இரு உலகப்போர்கள், அணு ஆயுத அச்சுறுத்தல், பல்வேறு மோதல்கள் என, அனைத்தும், மக்களின் துன்பங்களை அதிகரித்து வருகின்ற அதேவேளை, இப்போக்குகள் எதை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றன என தன் செய்தியில் கூறியுள்ளார்.

இன்று, உடைந்து சிதறியிருக்கும் நம் உலகிற்கு, வன்முறை என்பது, குணமளிக்கும் மருந்தாக முடியாது, ஏனெனில், வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வது என்பது, குடிபெயர்தலுக்கும், துன்பங்களுக்கும், மரணங்களுக்குமே இட்டுச் செல்லும் என மேலும்  கூறியுள்ளார் திருத்தந்தை.

வன்முறைகள் சூழ்ந்ததொரு காலத்தில் வாழ்ந்த இயேசு, அன்பு மற்றும் மன்னிப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் நம்  இதயங்களுக்குள் அமைதியை அனுபவித்து, அதன் வழியாக, ஒப்புரவின் கருவிகளாக செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அகிம்சை என்பது வன்முறையைவிட சக்தி நிறைந்தது என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை தெரேசாவின் வார்த்தைகளையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, Khan Abdul Ghaffar Khan,  மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மார்ட்டின் லூதர் கிங்,  Liberiaவின் Leymah Gbowee ஆகியோரின் அகிம்சா வெற்றிகளையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பங்களில் நிலவ வேண்டிய வன்முறையற்ற வழிகள், குடும்பங்களில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முழு பாதுகாப்பு, போன்றவற்றையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுபெற்றோர் பற்றியச் செய்தியினையும் முன்வைத்த திருத்தந்தை, இயேசுவின் இந்தப் போதனைகள், அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும், அமைதியையும் அகிம்சையையும் கட்டியெழுப்புவதில் திரு அவையின் ஒத்துழைப்பையும் குறித்து தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.