2016-12-13 16:00:00

சிரியா அரசுத்தலைவருக்கு திருத்தந்தை கடிதம்


டிச.13,2016. சிரியாவில் இடம்பெற்றுவரும் கடும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், அப்பாவி குடிமக்கள் பாதுகாக்கப்படவும், மனிதாபிமான நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவசரகால உதவிகளை வழங்கவும், தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றுமாறு, சிரியா அரசுத்தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

சிரியாவுக்கான திருப்பீடத் தூதர், புதிய கர்தினால் மாரியோ செனாரி அவர்கள், சிரியா அரசுத்தலைவர் பாஷர் அசாத் அவர்களை, டிசம்பர் 12.  இத்திங்களன்று சந்தித்தபோது, திருத்தந்தையின் இக்கடிதத்தை அளித்தார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர் மாரியோ செனாரி அவர்களை, கர்தினாலாக உயர்த்தியிருப்பது, அண்மை ஆண்டுகளில், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குரிய சிரியா மக்கள் மீது, திருத்தந்தை, தனது தனிப்பட்ட பாசத்தை வெளிப்படுத்த விரும்பியதன் அடையாளமாக உள்ளது என்றும், திருப்பீட அறிக்கை கூறுகின்றது.

அப்பாவி குடிமக்கள் பாதுகாக்கப்படுதல், மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழியமைத்தல் ஆகியவற்றில், உலகளாவிய மனிதாபிமான சட்டம் முழுமையாய் மதிக்கப்படுவதற்கு, சிரியா அரசுத்தலைவர் உறுதி வழங்குமாறும், திருத்தந்தை, அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும், திருப்பீட அறிக்கை கூறுகின்றது.

மேலும், திருத்தந்தையின் இக்கடிதம் பற்றிய செய்தியை, சிரியாவின் SANA செய்தி நிறுவனமும் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.