2016-12-13 16:20:00

மனித மாண்பு வயதால் நிர்ணயிக்கப்படக் கூடாது, பேராயர் அவுசா


டிச.13,2016. முதுமை, சந்தை உற்பத்தியில் திறன் குறைவு போன்ற காரணங்களின் அடிப்படையில், மனித மாண்பு குறைக்கப்படக் கூடாது என, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. கூட்டமொன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வயது முதிர்ந்த மக்களின் மனித உரிமைகளையும், மாண்பையும் ஊக்குவித்து பாதுகாத்தல் என்ற தலைப்பில், ஐ.நா.வில் நடைபெற்ற, ஏழாவது கலந்துரையாடலில், பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அவுசா அவர்கள், மக்கள் எல்லாரும் இணைக்கப்படும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும் குறிப்பிட்டார். 

ஏராளமான மக்கள், நிச்சயமற்ற வருங்காலத்தில் வாழ்கின்றனர், மற்றும், அவர்கள் தங்களின் தனித்துவத்தைக் காண்பதற்குக் கஷ்டப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், இத்தகைய சூழலில், வயது முதிர்ந்தவர்கள், நம் முக்கிய கவனத்துக்கு உள்ளாகின்றனர் என்று உரையாற்றினார்.

உலகில், 2030ம் ஆண்டுக்குள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், 56 விழுக்காடாக அதிகரித்து, 140 கோடியை எட்டுவார்கள் எனவும், 2050ம் ஆண்டுக்குள் அவ்வெண்ணிக்கை, ஏறக்குறைய 210 கோடியாக உயரும் எனவும் சுட்டிக்காட்டிய பேராயர், இதை மனதில் வைத்து, வயதானவர்களை மாண்புடன் நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

வயது முதிர்ந்தவர்கள், பொருளாதார மற்றும் சமூகச் சுமைகளாக நோக்கப்படக் கூடாது எனவும், ஐ.நா.வில் பேசினார் திருப்பீட அதிகாரி பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.