சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உலகம்

நமது மறைசாட்சிகள், நம்மை விண்ணகத்தோடு பிணைத்துள்ளனர்

குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு, கெய்ரோவின் புனித மாற்கு பேராலயத்தில் நிகழ்ந்த அடக்கச் சடங்கு - EPA

14/12/2016 16:14

டிச.14,2016. இஞ்ஞாயிறன்று உயிரிழந்த நமது மறைசாட்சிகள், அவர்களது சாட்சிய மரணத்தால் நம்மை விண்ணகத்தோடு பிணைத்துள்ளனர் என்று, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இரண்டாம் தவாத்ரோஸ் அவர்கள் இறந்தோரின் அடக்கச் சடங்கில் கூறினார்.

கெய்ரோ நகரின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் பேராலயத்திற்கருகே அமைந்துள்ள Botrosiya கோவிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இறந்தோருக்கு, கெய்ரோவின் புனித மாற்கு பேராலயத்தில் நிகழ்ந்த அடக்கச் சடங்கில், முதல் நூற்றாண்டு முதல், மறைசாட்சிகளின் இரத்தத்தால் வளர்க்கப்பட்டவர்கள் நாம் என்று, முதுபெரும்தந்தை தவாத்ரோஸ் அவர்கள் கூறினார்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முன்னதாக, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டில் கடைபிடிக்கப்படும் Kiahk என்றழைக்கப்படும் மரியன்னை மாதத்தில் நிகழ்ந்துள்ள இந்த மரணங்கள், இறைவன் மீது அன்பு கொண்டவர்களுக்கு மரணம் இல்லை என்பதை நமக்கு நினைவுறுத்துகின்றன என்று, முதுபெரும்தந்தை தவாத்ரோஸ் அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

பேராலயத்தில் நிகழ்ந்த அடக்கச் சடங்கைத் தொடர்ந்து, முதுபெரும்தந்தை தவாத்ரோஸ் அவர்களின் தலைமையில், கெய்ரோ நகரின் நடுவே அமைந்துள்ள சதுக்கத்திற்கு மௌன ஊர்வலம் சென்றது என்றும், அங்கு நடைபெற்ற ஒரு நினைவு கூட்டத்தில், எகிப்து அரசுத்தலைவர், Abdel Fattah al-Sisi அவர்கள் கலந்துகொண்டார் என்றும் Fides செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

14/12/2016 16:14