2016-12-14 16:02:00

'Opus Dei' தலைவர் மரணத்திற்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


டிச.14,2016. 'Opus Dei' என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய ஆயர், Javier Echevarría Rodríguez அவர்கள், இத்திங்கள் இரவு இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபத் தந்தியை இவ்வமைப்பிற்கு அனுப்பியுள்ளார்.

ஆயர் Rodríguez அவர்கள், இவ்வமைப்பின் நிறுவனர், புனித Josemaria Escriva மற்றும் அவருக்கு அடுத்ததாக இவ்வமைப்பை வழிநடத்திய அருளாளர், Álvaro del Portillo ஆகியோரைப் போல, நம்பிக்கைக்குரிய ஊழியராகப் பணியாற்றினார் என்று, திருத்தந்தை தன் தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளான டிசம்பர் 12ம் தேதி, இறையடி சேர்ந்த ஆயர் Rodríguez அவர்களை, இறைவன் தன் நித்தியப் பேரின்பத்தில் இணைத்திட வேண்டும் என்று, திருத்தந்தை தன் அனுதாபத் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1932ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் பிறந்த Rodríguez அவர்கள், 1955ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1995ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1953ம் ஆண்டு முதல், 1975ம் ஆண்டு முடிய இவர், Opus Dei நிறுவனர், Escriva அவர்களுக்கு செயலராகப் பணியாற்றியவர் என்பதும், 1994ம் ஆண்டு முதல், இவர் இவ்வமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

84 வயது நிறைந்த ஆயர் Rodríguez அவர்களின் அடக்கத் திருப்பலி, டிசம்பர் 15, இவ்வியாழனன்று, உரோம் நகரின் புனித யூஜின் பசிலிக்காவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.