2016-12-14 15:58:00

அன்னியருக்கெதிரான வெறுப்பையும் பயத்தையும் தடுக்கும் முயற்சி


டிச.14,2016. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவை பிரித்தானிய மக்கள் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டில், அன்னியருக்கு எதிராக எழுந்துவரும் வெறுப்பையும் பயத்தையும் தடுப்பதற்கு, கிறிஸ்தவ சபைகளும், இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவான JRS அமைப்பும் இணைந்து #LondonUnited என்ற முயற்சியைத் துவங்கியுள்ளனர்.

இங்கிலாந்து ஆயர் பேரவையின் தலைவரும், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயருமான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், மற்றும் ஆங்கிலிக்கன் சபையைச் சார்ந்தவர்கள், இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே, கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், புனித வின்சென்ட் டி பால் அமைப்புடன் இணைந்து, வீடற்றோருக்குத் தேவையான ஒரு உதவியைச் செய்து வருகிறார்.

வீடற்றோர், இக்குளிர் காலத்தில் தங்களையே பாதுகாத்து கொள்ளும் வகையில், அவர்களுக்குத் தேவையான உடைகள், காலுறைகள், கையுறைகள் அடங்கிய 12,000 பைகளை கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் வழங்கி வருகிறார்.

அண்மைய மாதங்களில் ஐரோப்பாவை அடைந்துள்ள புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கூடிவரும் இவ்வேளையில், அன்னியர் குறித்த அச்சங்களை நீக்குவதும், வளர்ந்துவரும் வீடற்றோர் பிரச்சனைக்கு உதவுவதும் கிறிஸ்து பிறப்பு காலத்திற்குத் தேவையான மனநிலை என்று கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

புனித வின்சென்ட் டி பால் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முயற்சியில், பல்வேறு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களும் உதவி செய்து வருகின்றனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.