2016-12-16 16:17:00

கொலம்பிய அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு


டிச.16,2016. 2016ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பெற்ற, கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ் கால்தெரோன் (Juan Manuel Santos Calderón) அவர்களை, இவ்வெள்ளி காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையை தனியாக சந்தித்துப் பேசிய பின்னர், மனைவி, மூன்று பிள்ளைகள் உட்பட, பத்துப் பேர் கொண்ட குழுவை திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்த அரசுத்தலைவர் கால்தெரோன் அவர்கள், திருத்தந்தையின் உதவி, தனது நாட்டிற்குத் தேவை என்று கூறினார்.

கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டு FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில், துப்பாக்கிக் குண்டு போன்று, வடிவமைக்கப்பட்ட பேனா ஒன்றை, திருத்தந்தையிடம் அளித்தார், கொலம்பிய அரசுத்தலைவர். அப்பேனாவில், துப்பாக்கிக் குண்டுகள், எங்களின் கடந்த காலமாக இருந்தன, அமைதி, எங்களின் வருங்காலமாக இருக்கின்றது என்று எழுதப்பட்டுள்ளது. கொலம்பியாவின் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உழைத்தவர்களுக்கு, இத்தகைய, ஏறக்குறைய ஐந்நூறு பேனாக்கள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்று, இவ்வெள்ளி காலையில், திருத்தந்தையிடம் அளிக்கப்பட்டது. 

திருத்தந்தையும், கொலம்பிய அரசுத்தலைவர் கால்தெரோன் அவர்களிடம், மூடிய வெள்ளை உறை ஒன்றையும், ஒரு பதக்கத்தையும், Laudato si', Evangeli gaudium, Amoris laetitia" ஆகிய மூன்று திருத்தூது மடல்களையும் வழங்கினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார், கொலம்பிய அரசுத்தலைவர் சாந்தோஸ் கால்தெரோன்.

திருப்பீடத்திற்கும், கொலம்பியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், கொலம்பிய அரசியல் கட்சிகளுக்கும், முன்னாள் FARC-EP புரட்சிக் குழுக்களுக்கும் இடையே நிலவ வேண்டிய ஒன்றிப்பின் முக்கியத்துவம், அமைதி நடவடிக்கையில், திருத்தந்தையின் பங்கு, தேசிய ஒப்புரவு, கல்வி, மன்னிப்பு ஆகியவற்றுக்கு, திருஅவையின் ஒத்துழைப்பு போன்ற கருத்துக்கள், இச்சந்திப்பில் பேசப்பட்டன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.