2016-12-16 16:27:00

சிரியாவில் அமைதி நிலவுவதே நிறைவான கிறிஸ்மஸ்


டிச.16,2016. ஐந்தாண்டுகளுக்கு மேலாக கடும் போர் நடந்துவரும் சிரியாவில், அமைதி நிலவுவதே நிறைவான கிறிஸ்மஸ் என, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவரான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தனது கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

சிரியாவில் இடம்பெற்றுவரும் கடும் மனிதாபிமான நெருக்கடிகளை மையப்படுத்தி, கிறிஸ்மஸ் செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், அந்நாட்டில், எப்போதும் குளிர்காலமாக இருப்பதாகவேத் தெரிகின்றது, இந்நிலையில், அங்கு, கிறிஸ்மஸ் ஒருபோதும் கிடையாது என்று கூறியுள்ளார்.

சிரியாவில் நடந்துவரும் போரின் கொடுமையான காற்றுகளால், இலட்சக்கணக்கான மக்கள், வீடுகள் இன்றி துன்புறுகின்றனர் என்றும், புதிய துணிகள் என்பது, பள்ளிக்குச் செல்லும் சிறார்க்கு, கானல் நீராகவே உள்ளது என்றும், கவலை தெரிவித்துள்ளார் கர்தினால்.

குடியிருப்புக்களைக் கொண்டிருப்பவர்களும்கூட, குளிருக்கு வெப்பமூட்டும்  மற்றும், மின்வசதிகளின்றி உள்ளனர் என்றுரைத்துள்ள கர்தினால் தாக்லே அவர்கள், இக்குளிர்காலத்தில், குளிரில் வாடும் அம்மக்களுக்கு, காரித்தாஸ் பணியாளர்கள், தங்கள் நாற்காலிகளை எறித்து, வெப்பமூட்டி, உதவி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இவ்வளவு கொடூரங்கள் மத்தியில், அங்கேயே தங்கி, பொருளாதார மற்றும், ஆன்மீகப் பணிகளை ஆற்றி வருகிறவர்கள், உண்மையிலேயே தியாகிகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியிருப்பதை நினைவுபடுத்தியுள்ள கர்தினால், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புகள், சிரியாவில், அமைதி நிலவ உழைத்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அமைதி நிலவுவதே, இவ்வாண்டு கிறிஸ்மஸ் விழாவை, முழுமையாக அமைப்பதாக இருக்கும் எனவும், கர்தினால் தாக்லே அவர்களின் செய்தி கூறுகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.