2016-12-17 16:41:00

மியான்மாரில் 2017ம் ஆண்டு அமைதியின் ஆண்டாக அமையட்டும்


டிச.17,2016. மியான்மாரில், 2017ம் ஆண்டை, உண்மையிலேயே அமைதியின் ஆண்டாக அமைப்பதற்கு, எல்லா மதத்தினரும், எல்லா இனத்தவரும் ஒன்றிணைந்து உழைப்பதற்கான நேரம் இதுவே என்று, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

நீதியின் வழியாகவும், உரையாடல் வழியாகவும் அமைதி இயலக்கூடியதே என, புத்தாண்டை முன்னிட்டு, Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ள, கர்தினால் போ அவர்கள், புத்தாண்டு நாளில், துறவு மடாலயங்கள், ஆலயங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகளுக்குச் செல்லும் எல்லாரும், “அனைத்துப் போர்களும் நிறுத்தப்படுக!” என்ற வாசகம் எழுதிய அட்டைகளை ஏந்திச் செல்லுமாறு கேட்டுள்ளார்.

2017ம் ஆண்டு சனவரி முதல் நாளை, அமைதிக்காக அர்ப்பணிக்கும் செபம் மற்றும் நோன்பு நாளாக, எல்லா மதத்தினரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ள கர்தினால், நாம் ஒவ்வொருவரும், மகிழ்வான புத்தாண்டு என, வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம், ஆனால், உண்மையில், நாட்டின் பல பகுதிகளில், மகிழ்வு இல்லை என்றும், புலம்பெயர்ந்தவர் முகாம்களில் வாழும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு மகிழ்வு இல்லை என்றும் கூறியுள்ளார்.

அண்டை நாடுகளான கம்போடியாவிலும், வியட்நாமிலும் போர்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன, ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், மியான்மாரில் தொடங்கிய போர் இன்றும் தொடர்கின்றது என்றும், கர்தினால் போ அவர்கள் கவலையுடன் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.