2016-12-19 16:45:00

பிலிப்பீன்சில் போதைப்பொருளால் வாழ்வு அழிவுக்குள்ளாகிறது


டிச.19,2016.  சட்டவிரோதப் போதைப் பொருட்களால் பிலிப்பீன்ஸ் நாட்டில் வாழ்வு அழிவுக்குள்ளாகி வரும் அதேவேளை, போதைப்பொருட்களில் ஈடுபடுவோரை கொல்வதாலும் புது நம்பிக்கைகள் கிட்டுவதில்லை என உரைத்தார், அந்நாட்டு கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

பிலிப்பீன்ஸ் நாட்டின் தேசிய சிறையில், கைதிகளுக்கு கிறிஸ்மஸ் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய கர்தினால் தாக்லே அவர்கள், பகிரப்படாத வாழ்வு இறந்துவிடும், அதேவேளை, வாழ்வு பகிரப்படாதிருக்கும்வகையில் தடைபோடுவது, மிகவும் வருத்தத்திற்குரியது என்றார்.

தவறிழைத்தவர்கள், ஒரு புதிய வாழ்வைத் துவக்குவதற்கான வாய்ப்புகள், கொலைகள் மூலம் தடுக்கப்படுகின்றன எனவும் உரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், தவறிழைத்தவர்கள் திருந்தி புதிய வாழ்வை அமைக்க வாய்ப்பளிக்கும்போது, அவர்கள் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க இது உதவும் என்றார்.

சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற திட்டத்தை பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள் துவக்கியதைத் தொடர்ந்து, கடந்த 167 நாட்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் :  UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.