2016-12-20 16:47:00

இரஷ்ய தூதர் Karlov கொலைசெய்யப்பட்டதற்கு திருத்தந்தை இரங்கல்


டிச.20,2016. “அன்பை,செயலில் தெளிவாக வெளிப்படுத்துவது, இரக்கம். இது, மன்னிப்பதன் வழியாக, நம் வாழ்வை மாற்றுகின்றது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், துருக்கியில், இரஷ்ய தூதர் Andrey Karlov அவர்கள், கொலைசெய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கலைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்களுக்கு, அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

தூதர் Karlov அவர்களின் இழப்பால் வருந்தும் எல்லாருக்கும், குறிப்பாக அவரின் குடும்பத்தினருக்கும், இரஷ்ய மக்களுக்கும், திருத்தந்தையின் செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் கர்தினால் பரோலின்.

மேலும், இரஷ்ய தூதர் Karlov அவர்கள் கொலைசெய்யப்பட்டதையடுத்து, திருப்பீட பன்னாட்டு உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், திருப்பீடத்திற்கான இரஷ்ய தூதர் Alexander Avdeev அவர்களிடம், தொலைபேசியில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், Andrei Karlov அவர்கள், இத்திங்களன்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது, 22 வயது நிரம்பிய Mevlut Mert Altintas என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்காரா காவல்துறை பணியாளரான Altintas என்பவர், சிரியாவின் அலெப்போவில், இரஷ்யாவின் ஈடுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இக்கொலையைச் செய்தார் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மேலும், இக்கொலை பற்றி வருத்தம் தெரிவித்த, துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdogan அவர்கள், இரஷ்யாவோடு துருக்கி கொண்டிருக்கும் உறவைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தை, இவ்வன்முறை கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இன்னும், துருக்கியில், இரஷ்ய தூதர் Karlov அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதையடுத்து, உலகில் அனைத்து இரஷ்ய தூதரகங்களுக்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.