2016-12-20 16:25:00

ஜெர்மனியின் உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம்


டிச.20,2016. ஜெர்மனியின் கிறிஸ்மஸ் சந்தையில் இத்திங்களிரவு கனரக வாகனம் ஒன்று புகுந்ததில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, தனது ஆறுதலையும், செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெர்லின் நகரில், கிறிஸ்மஸ் சந்தையில் இடம்பெற்ற இப்பயங்கரமான வன்முறையில் இறந்தவர்களுக்கு, இறைவன் நிறைசாந்தியை வழங்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் செபித்துள்ள திருத்தந்தை, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியும், பாதுகாப்பும் வழங்கும் பணியை ஆற்றுபவர்களுக்கு, தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு இந்த உலகில் இடமே இல்லாமல் ஆக்குகின்ற ஓர் உலகை அமைப்பதற்கு முயற்சிக்கும் நல்மனம் கொண்ட மனிதர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும், அனைவருக்கும், இறைவனின் இரக்கமும், ஆறுதலும், பாதுகாப்பும் கிடைப்பதற்குச் செபிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த இரங்கல் தந்தியை, பெர்லின் பேராயர் Heiner Koch அவர்களுக்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

பெர்லின் நகர் மையத்தில், மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர், பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட புலம்பெயர்ந்தவர் என்று சந்தேகிப்பதாக, ஜெர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.