2016-12-20 16:49:00

திருத்தந்தையின் பிறந்த நாளுக்கு ஹாங்காங்கில் இசை நிகழ்ச்சி


டிச.20,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு, ஹாங்காங் பேராலயத்தில், இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள திருஅவை குறித்து கவனம் செலுத்தும், ஹாங்காங்கிலுள்ள திருப்பீட ஆய்வுப்பணி மையமும், ஹாங்காங் அமலமரி பேராலயமும் இணைந்து, இந்த இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளன.

இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய, ஹாங்காங் பேராலய அதிபர் பேரருள்திரு Ante Jozic அவர்கள், ஒவ்வொருவருக்கும், குறிப்பாக, ஏழைகள், ஒதுக்கப்பட்டோர் மற்றும், சுதந்திரமின்றி வாழ்பவருக்கு, இந்த உலகம் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போதித்தும், பலரைத் தூண்டியும் வருகிறார் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சி, இளையோருக்கு, நல்வழி காட்டுவதாக அமைந்திருக்கும் என்ற தன் நம்பிக்கையையும் ஆசிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் பேரருள்திரு Jozic.

இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் குரோவேஷிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், இந்நிகழ்ச்சியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் அவர்கள், இந்நிகழ்ச்சியை நடத்திய இளையோரின் திறமைகளைப் பாராட்டிப் பேசினார். அதோடு, நம்மிடமிருக்கின்ற திறமைகள், கடவுள் நமக்கு அளித்துள்ள கொடைகள் எனவும், இவற்றைப் பயன்படுத்துவதற்கு, திருத்தந்தை நம்மைத் தூண்டி வருகிறார் எனவும் கூறினார், கர்தினால் ஜான் டாங்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.