2016-12-21 13:08:00

இரக்கத்தின் தூதர்கள் : ஏழைகளுடன் பகிர்வதில் இன்பம் கண்டவர்


டிச.21,2016. ஒரு நாள், ஓர் அருள்பணியாளர், தனது உணவு அறையில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில், ஒரு பிச்சைக்காரர், சோர்வாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அந்த அருள்பணியாளர், விரைவாக ஓடிச் சென்று, அந்த மனிதரை நிறுத்தி, தன்னிடமிருந்த உணவு எல்லாவற்றையும் அவருக்குக் கொடுத்துவிட்டு அறைக்குத் திரும்பினார். ஆனால் அதிசயம். அவரது உணவு மேஜையிலிருந்த தட்டில், சாப்பாடு குறையாமல் இருந்தது. போலந்து நாட்டைச் சேர்ந்த இந்த அருள்பணியாளருக்கு, துருக்கியர்களின் கையில், விசுவாசத்திற்காக கொலைசெய்யப்பட்டு, மறைசாட்சியாக இறக்க வேண்டுமென்பதில் கொள்ளைப் பிரியம். அதனால், ஒருமுறை எருசலேமுக்கும், நான்கு முறை உரோமைக்கும் நடந்தே திருப்பயணங்கள் மேற்கொண்டார். அவ்வாறு மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது, அவரைத் திருடர்கள் வழிமறித்து, ஆயுதங்களால் தாக்கி, அவரிடமிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் பறித்துச் சென்றனர். சிறிதுநேரம் சென்று, அவர், எதார்த்தமாக, தனது பைக்குள் கைவிட்டார். அதில், ஒரு தங்கக் காசு கிடப்பதைக் கண்டார். உடனே, அந்தத் திருடர்களைத் தேடிச்சென்று, அவர்கள் அந்தக் காசை, தனது பைக்குள் விட்டுவிட்டதாகச் சொல்லி, அதை அவர்களிடம் கொடுத்தார். அந்த அருள்பணியாளரின்  நேர்மையைக் கண்ட அந்தத் திருடர்கள், திகைத்துப் போய், அவரின் காலடியில் விழுந்து மன்னிப்பு வேண்டினர். அவரிடமிருந்து திருடிவந்த எல்லாப் பொருள்களையும் அவரிடமே கொடுத்தனர். இவ்வாறு, இந்த அருள்பணியாளர், தனது திருப்பயணங்களில் பல புதுமைகளை ஆற்றினார் என்று, அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. இவர்தான், புனித யோவான் கான்டியுஸ்(John Kantius)

போலந்து நாட்டின், கிராக்கோவ் உயர்மறைமாவட்டத்தில், Oswiecim நகரத்திற்கு அருகிலுள்ள Kentyல், 1390ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி பிறந்தார் புனித யோவான் கான்டியுஸ். ஸ்தனிஸ்லாஸ், அன்னா தம்பதியரின் மகனான இவர், ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரில் முடித்து, கிராக்கோ பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பை முடித்தார். மாணவராக இருந்தபோது, இவரிடம் விளங்கிய தாழ்மை, இறைபக்தி மற்றும் பிற பண்புகள் எல்லாரையும் கவர்ந்தன. மெய்யியல் மற்றும் இறையியலில், முனைவர் பட்டமும் பெற்ற இவர், கிராக்கோவ் கல்லூரியில், இறையியல் பேராசிரியராகவும், பின்னர், சிறிதுகாலம் முதல்வராகவும் பணியாற்றினார். கிராக்கோவ் உயர்மறைமாவட்டத்திற்கென, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர், Olkusz என்ற ஊரின் பங்குத் தந்தையாக இவரை நியமித்தனர். இந்தப் பணியைத் தன்னால் திறமையாக ஆற்ற இயலாது என்று இவர் அஞ்சினார். அதனால், அங்கிருந்து விரைவிலே மாற்றப்பட்டு, கிராக்கோவ் வந்து, இறையியல் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். இப்பணியை, இவர் இறக்கும்வரை, அதாவது, 1473ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வரைத் தொடர்ந்தார். இப்புனிதரின் வாழ்க்கை வரலாறை முதன்முதலில் எழுதிய போலந்து வரலாற்று ஆசிரியர், Michael Miechowita அவர்கள், புனித யோவான் கான்டியுஸ் அவர்கள், அளவற்ற தாழ்மையும், தாராள மனமும் கொண்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புனித யோவான் கான்டியுஸ் அவர்கள், உணவு, பணம், ஆடைகள் என, தன்னிடமிருந்த அனைத்தையும், தேவையில் இருந்தவர்களுக்கு வாரி வழங்கினார். தன் வாழ்வுக்கு, மிக மிக அத்தியாவசியமான பொருள்களை மட்டுமே வைத்துக்கொண்டார். சிறிது நேரமே தூங்கினார். போலந்து நாட்டில், குளிர் கடுமையாக இருக்கும். அந்தக் குளிரிலும்,  தரையில் படுத்து உறங்கினார். மிகக் குறைந்த அளவு உணவையே, அதுவும் சைவ உணவையே உண்டார். ஒருநாள், ஓர் ஏழை கேட்டார் என்பதற்காக, தனது காலணியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலுடன், இரத்தம் சொட்டச் சொட்ட நடந்து வந்தார். இவ்வாறு ஒருமுறை மட்டுமல்ல, பலமுறைகள் நடந்துள்ளன. சமுதாயத்தில், மதிப்பிழந்த மக்கள் மற்றும் இறைவனுக்கு எதிராகத் தவறிழைக்கும் மக்களுக்காக, இவர் தினமும் திருப்பலியில் செபித்தார். பிறர் பற்றி குறைகூறுவதை இவர் விரும்பியதும், அதை ஆதரித்ததும் கிடையாது. புறங்கூறுகிறவர்கள் மற்றும், வீணாக வெட்டிப்பேச்சு பேசிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இப்புனிதர் விரும்பியதால், தனது அறையின் சுவரில், “மற்றவர்களை அவதூறாகப் பேசுவது மற்றும், பிறருக்குத் துன்பம் தருவதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், செய்த தீமையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமான, சிக்கலான காரியம்” என்று எழுதி வைத்திருந்தார். இப்புனிதர், தன் மாணவர்களிடம், “தவறான கருத்துக்கள் எல்லாவற்றுக்கும் எதிராகப் போராடுங்கள். ஆனால், அந்நேரங்களில், அன்பு, பொறுமை, கனிவு, இனிமை போன்றவை உங்கள் ஆயுதங்களாக இருக்கட்டும். முரடர்களாக இருப்பது நம் ஆன்மாவுக்கு நல்லதல்ல. அது நல்லெண்ணத்தைச் சிதைத்து விடும்” என்று கூறுவாராம்.

இவ்வாறு, தன் பொறுப்பிலிருந்த அனைவரையும், நெறிப்படுத்திய புனித யோவான் கான்டியுஸ் அவர்கள், 1473ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். இவர், 1767ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் கிளமெண்ட் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார். இப்புனிதர் வாழ்ந்தபோது மட்டுமல்ல, இறந்த பின்னரும், இவரின் பரிந்துரைகளால் பல புதுமைகள் நடந்துள்ளன. புனித யோவான் கான்டியுஸ், போலந்து மற்றும் லித்துவேனிய நாடுகளுக்குப் பாதுகாவலர். திருஅவையில், ஆயராகாத ஒரு புனிதர், மறைபோதகராக மதிக்கப்படுவது, புனித யோவான் கான்டியுஸ் அவர்களை மட்டுமே எனச் சொல்லப்படுகின்றது.

“ஏழைகளுக்கு உதவிசெய்; தேவையின்போது அவர்களை வெறுங்கையராய்த் திருப்பி அனுப்பாதே. உன் களஞ்சியத்தில் தருமங்களைச் சேர்த்துவை; அவை, எல்லாத் தீமையினின்றும் உன்னை விடுவிக்கும் (சீராக்.29:9,12)” என்கிறது திருவிவிலியம். 

ஆம். ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவோர், இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.