2016-12-21 15:40:00

இஸ்லாமியத் தொழுகை அழைப்பைத் தடுக்கும் முயற்சி தவறு


டிச.21,2016. இஸ்லாமியத் தொழுகைக்கு ஒலிபெருக்கி வழியே விடப்படும் அழைப்பினை, ஒலி மாசுபாடு என்று கூறி, இஸ்ரேல் அரசு தன் நாட்டில் தடை செய்ய நினைப்பது தவறான ஒரு முயற்சி என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 5 முறை ஒலிக்கும் இந்த அழைப்பைத் தடைசெய்யும் ஒரு சட்டவரைவை, இஸ்ரேல் பாராளுமன்றம் விவாதித்து வரும் வேளையில், ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேறு பல வழிகள் உள்ளன என்றும், இத்தகையத் தடை தீர்வு அல்ல என்றும் பேராயர் Pizzaballa அவர்கள் கூறினார்.

இந்த முயற்சி, பாலஸ்தீனிய மக்களைச் சீண்டிவிடும் ஒரு முயற்சி என்றும், இது, தங்கள் பகுதியை இன்னும் பாதாளத்தில் தள்ளிவிடும் செயல்பாடு என்றும், பாலஸ்தீனிய அரசுத் தலைவர், Abu Mazen அவர்கள் கூறியுள்ளார்.

Cremisan பள்ளத்தாக்கில் சுவர் எழுப்பக்கூடாது என்று இஸ்ரேல் அரசிடம் பலமுறை விண்ணப்பித்தும், அவர்கள் அச்சுவரை எழுப்புவதற்கு, பல கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது தவறு என்பதையும், பேராயர் Pizzaballa அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.