2016-12-23 15:38:00

சிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது


டிச.23,2016. சிரியாவின், அலெப்போவில் கடைசி புரட்சிக் குழுக்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரை முழுமையாக, மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக, சிரியா இராணுவம் இவ்வெள்ளியன்று தெரிவித்தது.

அலெப்போவில் பாதுகாப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், புரட்சியாளர்களுக்கு, இது மாபெரும் அடி என்றும் செய்திக் குறிப்பு ஒன்றில் இராணுவம் தெரிவித்துள்ளது.

அலெப்போவை விட்டு வெளியேற விரும்பிய அனைத்துப் பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் புரட்சியாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது.

சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக, 2011ம் ஆண்டிலிருந்து தொடங்கிய எழுச்சியையடுத்து, அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இதுவாகும் எனக் கூறப்படுகின்றது.

கடந்த வாரத்தில் மட்டும் குறைந்தது 35 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் புரட்சியாளர்கள், கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக, சிரியா குறித்த ஐ.நா ஆலோசகர் Jan Egeland அவர்கள் தெரிவித்தார். 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும், 750 வாகனங்களில் இம்மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அறிவித்த Egeland அவர்கள், இப்பணியில் பெரிதும் உதவிய, சிரியா செம்பிறை சங்கத்திற்கு, தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.