2016-12-26 13:39:00

அமைதி மற்றும் ஒப்புரவின் வழிகளைக் கண்டுபிடிக்க விண்ணப்பம்


டிச.26,2016. அமைதி மற்றும் ஒப்புரவின் வழிகளைக் கண்டுபிடித்து, புனித பூமிக்கு உதவுமாறு அப்பகுதியின் கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து, தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மனிதர்களுக்கு பெரும் நிறைவான வாழ்வை வழங்க வந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், புனித பூமிக்கான அமைதி குறித்து உலகத் தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புவதாகக் கூறும் கிறிஸ்தவத் தலைவர்கள், இயேசு பிறப்பின்போது, வானதூதர்கள் பேரணி பாடிய பாடல், அச்சம், சந்தேகம், சிறைப்படல் போன்றவைகளின் சுவரை உடைப்பதாக இருந்தது என்பதையும் எடுத்தியம்பியுள்ளனர்.

புனித பூமியின் மக்கள் படும் துன்பங்களை தங்கள் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், மத்தியக் கிழக்கு நாடுகளில் துன்பங்களை அனுபவிக்கும் குழந்தைகளுக்காக தொடர்ந்து செபிப்பதாகவும் கூறியுள்ளனர் அப்பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.

அலெப்போ மற்றும் மொசூல் நகர்களின் தெருக்களில் அமைதி திரும்புவதுடன், அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, அமைதியில் வாழ வழி வகுக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர் புனித பூமியின் கிறிஸ்தவத் தலைவர்கள்.

இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா சிறப்புச் செய்தியில், கத்தோலிக்கம், ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிக்கன் மற்றும் லூத்தரன் கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த 13 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : Catholicculture /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.