2016-12-26 13:02:00

இரக்கத்தின் காலம் : அவசியமில்லாமல் ஆடம்பரம் கூடாது


மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. மக்கள் மன்னரின் பிறந்த நாளை, ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் என, மகிழ்ச்சியோடும், ஆடம்பரமாகவும் கொண்டாடினர். அரச சபையில், முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதிநிதிகள், பிறகு, உள்நாட்டு அதிகாரிகள், பிறகு பொதுமக்கள், பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் என, மன்னருக்குப் பரிசளித்து மரியாதை செலுத்தினர். அப்போது, பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தார். மன்னர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன்னருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டுவந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால், அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார். தெனாலிராமன் அவர்களும், தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தார். பிரித்துக் கொண்டே இருந்தார். பிரிக்கப் பிரிக்கத் தாள்கள், காலடியில் சேர்ந்தனவே தவிர, பரிசுப்பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச் சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தார் தெனாலிராமன். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். மன்னர் கையமர்த்தி, "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவர் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு, தெனாலிராமன் பக்கம் திரும்பி, "ராமா இந்தச் சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?'' எனக் கேட்டார். " மன்னா, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம், புளியம் பழம் ஒன்றுதான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில், காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம் பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம் பழம் ஓடும்போல இருங்கள்! என்றார். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க அரியணையைவிட்டு எழுந்து, தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. அரசின் பணமும், பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். ஆரவாரங்களை உடனே நிறுத்துங்கள். இனி என் பிறந்த நாளன்று, அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது'' என உத்தரவிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.