2016-12-26 13:41:00

சிறைக்கைதிகளுடன் கிறிஸ்மஸ் விழாவைச் சிறப்பித்த இலங்கை ஆயர்


டிச.26,2016. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு இலங்கையின் மட்டக்கிளப்புச் சிறைச்சாலையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, சிறைக்கைதிகளுடன் இத்திருவிழாவைக் கொண்டாடினார், மட்டக்கிளப்பு ஆயர், ஜோசப் பொன்னையா.

இயேசுவின் பிறப்பு, வரலாற்றையே மாற்றியமைத்தது மட்டுமல்ல, பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டுள்ள மக்களையும் ஒன்று சேர்த்துள்ளது என, சிறைக்கைதிகளுக்கு மறையுரை வழங்கிய ஆயர் பொன்னையா அவர்கள்,

இயேசுவின் பிறப்பு நமக்கு மூன்று பாடங்களை கற்றுத் தருகின்றது, அவையாவன, கடவுள் மனிதரோடு இருக்க விரும்பினார், கடவுள் மனிதரோடு வாழ விரும்பினார், மற்றும், மனிதரின் வேதனைகளை அனுபவிக்க விரும்பினார் என்று கூறினார்.

வாழ்வு என்பது கடவுளின் கொடை, இந்த வாழ்வில் தோல்வியை நினைத்து வேதனையடைக் கூடாது, நம்பிக்கையிழக்கக் கூடாது, இறைவன்  ந‌ம்முடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் வேரூன்ற வேண்டும் எனவும் சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டார், மட்டக்களப்பு ஆயர் பொன்னையா.

சிறு குற்றங்களுக்காக தண்டனைத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்த மூன்று சிறைக்கைதிகள், இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் திருவிழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : TamilWin /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.