2016-12-28 15:34:00

அணுசக்தி ஆலைகள் ஆபத்தானவை - தென் கொரிய ஆயர்கள்


டிச.28,2016. அணுசக்தி ஆலைகள் மனித குலத்திற்கு ஆபத்தானவை என்பதால், அவற்றை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம் என்று, தென் கொரிய ஆயர் பேரவையின் சுற்றுச்சூழல் பணிக்குழுத் தலைவர், ஆயர் Peter Kang U-il அவர்கள் கூறினார்.

அணுசக்திக்கு எதிர்ப்பு கூறும் பல தென் கொரிய அமைப்பினருடன் இணைந்து, அந்நாட்டுத் தலத்திருஅவை, "அணு சக்தியற்ற வழியை நாட்டில் உருவாக்குதல்" என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் பங்கேற்றது.

அணுசக்தி உற்பத்தியால், மனித உயிர்களின் ஆதாரமாக விளங்கும் பூமிக்கோளத்தை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுவதைக் கண்டு மௌனம் காப்பது தவறு என்று ஆயர் Peter Kang U-il அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் Gyeongju நகரில் உருவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நகர் அமைந்துள்ள Gyeongsang பகுதியில் 18 அணுசக்தி ஆலைகள் உள்ளன என்பது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியதால், அணுசக்திக்கு எதிரான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று UCAN செய்தி கூறுகிறது.

அணுசக்தியை விடுத்து, நீடித்திருக்கக்கூடிய இயற்கை சக்திகளைப் பயன்படுத்துவது குறித்து, அரசு திட்டமிடவேண்டும் என்று, அணுசக்தி எதிர்ப்பு அமைப்புக்கள் தென் கொரிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது என்று UCAN செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.